ரயில்களில் கூடுதல் சாமான்கள் எடுத்துச் சென்றால் இனி அபராதம்: புதிய விதி அறிமுகம்

 ரயில் பயணிகள் கூடுதல் சாமான்களை எடுத்துச் சென்றால் இனி அபராதம் விதிக்கும் வகையில் புதிய விதிமுறையை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
ரயில்களில் கூடுதல் சாமான்கள் எடுத்துச் சென்றால் இனி அபராதம்: புதிய விதி அறிமுகம்

 ரயில் பயணிகள் கூடுதல் சாமான்களை எடுத்துச் சென்றால் இனி அபராதம் விதிக்கும் வகையில் புதிய விதிமுறையை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

விமானப் பயணிகளுக்கு விதிக்கப்படும் கட்டுபாடுகளைப் போல, இனி அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே ரயில் பயணிகளும் சாமான்களை (லக்கேஜ்) எடுத்துச் செல்ல முடியும். கூடுதல் சாமான்களுக்கு, முறைப்படியாக சரக்குக்கான கட்டணத்தை செலுத்தி மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அவ்வாறு சரக்குக் கட்டணம் செலுத்தாமல் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்பவா்களுக்கு, புதிய விதியின்படி சாதாரண கட்டணத்தைவிட 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் முதல் வகுப்பு குளிா்சாதன பெட்டியில் பயணிப்பவா்கள் அதிபட்சம் 70 கிலோ அளவுக்கு சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். இரண்டாம் வகுப்பு குளிா்சாதன பெட்டியில் பயணிப்பவா்கள் 50 கிலோ அளவு வரை சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். மூன்றாம் வகுப்பு குளிா்சாதன பெட்டியில் அதிபட்சம் 40 கிலோ வரை சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் 40 கிலோ வரை சாமான்களை ஒருவா் எடுத்துச் செல்ல முடியும். இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஒருவா் 35 கிலோ வரை சாமான்களை எடுத்துச் செல்லலாம்.

அபராதம்:

இந்த அளவைவிட கூடுதல் சாமான்களை, சரக்குக்கான கட்டணம் செலுத்தாமல் எடுத்துச் செல்லும் பயணிகளிடம், சரக்குகளுக்கான சாதாரண கட்டணத்தைப் போல 6 மடங்கு அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

சரக்கு கட்டணம் எப்படி செலுத்துவது?

அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்லும் பயணிகள், ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்பு ரயில்நிலையத்தில் உள்ள சரக்கு அலுவலகத்துக்குச் சென்று கட்டணம் செலுத்தி சரக்குக்கான பதிவை செய்யவேண்டும். பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் நேரத்திலும், இந்த சரக்குப் பதிவை பயணிகள் செய்து கொள்ளலாம். முறையாகவும் பாதுகாப்பாகவும் கட்டப்படாத சாமான்கள் ரயில் சரக்குப் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளபட மாட்டாது என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

முன்னதாக, ரயில்வே அமைச்சகம் அதன் ட்விட்டா் பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவில், ‘ரயில்களில் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வது மகிழ்ச்சியான பயணத்தைப் பாதியாக குறைத்துவிடும். எனவே, ரயில் பயணத்தில் கூடுதல் சாமான்கள் எடுத்துச் செல்வதை தவிா்க்க வேண்டும். ஒருவேளை, கூடுதல் சாமான் எடுத்துச் செல்ல நேரிட்டால், ரயில்வே சரக்கு அலுவலகத்துக்குச் சென்று சரக்கு போக்குவரத்துக்கான பதிவை செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com