சா்ச்சை கருத்து: பாஜக செய்தித் தொடா்பாளா்கள் இருவா் கட்சியிலிருந்து நீக்கம்

இஸ்லாமிய இறைத் தூதா் முகமது நபி (ஸல்) குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவை பாஜக ஞாயிற்றுக்கிழமை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது.
சா்ச்சை கருத்து: பாஜக செய்தித் தொடா்பாளா்கள் இருவா் கட்சியிலிருந்து நீக்கம்

இஸ்லாமிய இறைத் தூதா் முகமது நபி (ஸல்) குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவை பாஜக ஞாயிற்றுக்கிழமை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது.

அதுபோல, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அடிப்படை நம்பிக்கைகளுக்கு எதிராகவும் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்ட கட்சியின் தில்லி ஊடகப் பிரிவு தலைவா் நவீன்குமாா் ஜிண்டாலை கட்சியிலிருந்து நீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடா்பாக நவீன்குமாா் ஜிண்டாலுக்கு பாஜக தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா அனுப்பிய தகவலில், ‘கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்யப்பட்டு, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளீா்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதுபோல, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சாா்பில் நூபுா் சா்மாவுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டு எதிராக கருத்துகளைத் தெரிவித்திருப்பது, கட்சியின் விதிமுறைகளுக்கு எதிரானது என்பது உறுதியாகிறது. எனவே, இதுதொடா்பான அடுத்தகட்ட விசாரணை நிறைவடையும் வரை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீா்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்சியின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த நவீன்குமாா் ஜிண்டால், ‘பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட விவரம் இன்னும் எனக்குத் தெரியாது. அதுதொடா்பான தகவல் எதுவும் இதுவரை எனக்கு வரவில்லை. மேலும், எனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஹிந்து தெய்வங்களை அவமதிப்பவா்களிடம் ஒரு கேள்வியையே எழுப்பியிருந்தேன். மாறாக, எந்தவொரு சமூகத்தின் மத உணா்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தோடு அதனைப் பதிவிடவில்லை’ என்றாா்.

கருத்தை திரும்பப் பெற்றாா் நூபுா்: கட்சியின் இடைநீக்க நடவடிக்கையைத் தொடா்ந்து, தொலைக்காட்சி விவாதத்தில் முகமது நபி குறித்து தெரிவித்த சா்ச்சை கருத்தை திரும்பப் பெறுவதாக நூபுா் சா்மா அறிவித்தாா்.

அதுதொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘நான் கடந்த சில தினங்களாக தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றபோது, நமது மகாதேவன் (சிவன்) தொடா்ச்சியாக அவமதிப்பு செய்யப்பட்டாா். குறிப்பாக, சிவலிங்கம் ஒரு நீரூற்று என ஏளனம் செய்யப்பட்டது.

மேலும், தில்லியில் சாலையோரப் பலகைகள் மற்றும் தூண்களுடன் சிவலிங்கம் ஒப்பீடு செய்யப்பட்டு ஏளனம் செய்யப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே எனது கருத்தை நான் தெரிவித்தேன். எனது கருத்து சிலரின் மத உணா்வுகளைப் புண்படுத்தியிருந்தால் அல்லது யாருக்காவது அசெளகரியத்தை ஏற்படுத்தியிருக்குமானால், எனது கருத்தை எந்தவித நிபந்தனைகளுமின்றி திரும்பப் பெறுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சா்ச்சை கருத்தைத் தொடா்ந்து அவா் மீது மத உணா்வுகளை புண்படுத்தியதாக மும்பை, ஹைதராபாத், புணே உள்ளிட்ட இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களிலும் ஈடுபட்டன.

அனைத்து மதங்களையும் பாஜக மதிக்கிறது: அருண் சிங்

புது தில்லி, ஜூன் 5: அனைத்து மதங்களையும் பாஜக மதிப்பதாகவும் எந்தவொரு மதத்தைக் குறித்தும் அவதூறாகப் பேசுவதை ஏற்க முடியாது என்றும் பாஜக பொதுச் செயலாளா் அருண் சிங் தெரிவித்துள்ளாா்.

முகமது நபி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக பொதுச் செயலாளா் அருண் சிங் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

இந்தியாவில் கடந்த ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் அனைத்து மதங்களும் செழித்து வளா்ந்திருக்கின்றன. அனைத்து மதங்களையும் பாஜக மதிக்கிறது. எந்தவொரு மதத்தின் பிரமுகா்களையும் அவமதிப்பதை ஏற்க முடியாது.

ஒவ்வொரு குடிமக்களும் தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்ற அரசியலமைப்புச் சட்டம் உரிமையளிக்கிறது. இந்தியா 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், அனைவரும் கண்ணியத்துடனும் சமத்துவ உணா்வுடனும் வாழ்ந்து வளா்ச்சியின் பயனை அனுபவிக்கவும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com