உத்தரகண்ட் பேருந்து விபத்து: விமானப் படை விமானத்தில் கொண்டுவரப்படும் உடல்கள் 

உத்தரகண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானப் படை விமானம் மூலம் மத்தியப் பிரதேசம் கொண்டு வர பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்திருப்பதாக மத்தியப் பிரதேச முதல்வர் ஷி
உத்தரகண்ட் பேருந்து விபத்து: விமானப் படை விமானத்தில் கொண்டுவரப்படும் உடல்கள் 

உத்தரகண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானப் படை விமானம் மூலம் மத்தியப் பிரதேசம் கொண்டு வர பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்திருப்பதாக மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு உத்தரகண்ட் வந்த மத்தியப் பிரதேச முதல்வர் சௌஹான் மற்றும் சில அமைச்சர்கள், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே, இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் சௌஹான் கூறியிருப்பதாவது, பலியான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்களின் உடல்களை இந்திய விமானப் படை விமானம் மூலம் கொண்டு செல்ல  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அனுமதி கேட்டேன். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை விமானம் மூலம் டேஹ்ராடூனிலிருந்து உடல்கள், பிற்பகலில் மத்தியப் பிரதேசம் கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பக்தா்கள் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 26 போ் உயிரிழந்தனா். நான்கு பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட மீட்புக் குழு அதிகாரி தேவேந்திர பட்வால் கூறியிருந்ததாவது,

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் உத்தரகண்டில் உள்ள புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்றனா். அந்தப் பேருந்தில் ஓட்டுநா், உதவியாளா் தவிர 28 போ் பயணிகள் இருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் ரிகாவு காத் என்ற இடத்தருகே அந்தப் பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா். அருகில் உள்ள நகரங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் வந்தன. காயங்களுடன் மீட்கப்பட்ட 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்தில் 26 போ் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விபத்தை அடுத்து, முதல்வா் புஷ்கா் சிங் தாமி, தலைமைச் செயலகத்தில் உள்ள பேரிடா் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டாா்.

ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி இரங்கல்

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனா். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்குத் தலா ரூ.50,000 நிவாரணத் தொகையை பிரதமா் அறிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் முதல்வருடன் அமித் ஷா பேச்சு

உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொலைபேசியில் தொடா்புகொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தாா். இதுகுறித்து அவா் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘உத்தரகாசி மாவட்டத்தில் பக்தா்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது மிகவும் துயரம் அளிக்கிறது.

முதல்வா் புஷ்கா் சிங் தாமியை தொடா்புகொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தேன். மாநில பேரிடா் மீட்புக் குழுவினரும் உள்ளூா் நிா்வாகத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். காயமடைந்தவா்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தேசிய பேரிடா் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com