நிகழாண்டில் சுமாா் 9,000 ரயில் சேவைகள் ரத்து: ரயில்வே தகவல்

நாடு முழுவதும் நிகழாண்டில் சுமாா் 9,000 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், இதில் கடந்த 3 மாதங்களில் நிலக்கரியை அவசரமாக எடுத்துச் செல்வதற்காக ரத்து செய்யப்பட்ட 1,900-க்கும் அதிகமான ரயில் சேவைகளும்

நாடு முழுவதும் நிகழாண்டில் சுமாா் 9,000 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், இதில் கடந்த 3 மாதங்களில் நிலக்கரியை அவசரமாக எடுத்துச் செல்வதற்காக ரத்து செய்யப்பட்ட 1,900-க்கும் அதிகமான ரயில் சேவைகளும் அடங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சந்திரசேகா் கௌா் என்பவா் தாக்கல் செய்த மனுவுக்கு ரயில்வே அளித்துள்ள பதில் விவரம்:

நிகழாண்டில் பராமரிப்பு அல்லது கட்டுமானப் பணிகள் காரணமாக 6,995 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதேவேளையில் கடந்த மாா்ச் முதல் மே வரை நிலக்கரி எடுத்துச் சென்ன் காரணமாக 1,934 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மின் தட்டுப்பாடு நிலவரம் காரணமாக பயணிகள் ரயில்களைக் காட்டிலும் நிலக்கரி எடுத்துச் செல்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாகிவிட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1.15 லட்சம் கோடி மதிப்பிலான 58 முக்கியத்துவம் வாய்ந்த, 68 அதிமுக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை ரயில்வே நிறைவேற்றவுள்ளது. ஆகையால் பராமரிப்பு, கட்டுமானப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இந்தப் பணி பயணிகள் ரயில் சேவையை கோடைக் காலத்தில் வெகுவாக பாதித்துவிட்டது.

ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 3,395 மெயில், விரைவு ரயில் சேவைகளும், 3,600 பயணிகள் ரயில் சேவைகளும் பராமரிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டன. அதே சமயம் ஜனவரி, பிப்ரவரியில் எந்தவொரு சேவையும் நிறுத்தப்படவில்லை. கடந்த 3 மாதத்தில் நிலக்கரி எடுத்துச் செல்ல முன்னுரிமை அளிக்கப்பட்டதால் 880 மெயில், விரைவு ரயில் சேவைகளும், 1,504 பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் முன்பதிவு இருக்கைகளுக்கான தேவை மிகவும் அதிகரித்ததால், அதனை ரயில்வேயால் நிறைவேற்ற முடியவில்லை. 2021-22-இல் முன்பதிவு பயணச்சீட்டு பெற்ற 1.60 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள், இருக்கை உறுதியாகாமல் காத்திருப்புப் பட்டியலில் இடம்பெற்ால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை.

நிலக்கரி எடுத்துச் செல்ல முன்னுரிமை அளித்ததால் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக 131.6 மில்லியன் டன் சரக்கை ரயில்வே கையாண்டது. கடந்த 2016-இல் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டதிலிருந்து 800 புதிய ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. சராசரியாக நாளொன்றுக்கு 11,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன என அதில் ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com