இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளா்ச்சி

இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளா்ச்சி கண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தில்லியில் உயிரி தொழில்நுட்ப தொழில்முனைவு நிறுவனங்களின் கண்காட்சியை தொடக்கிவைத்து பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
தில்லியில் உயிரி தொழில்நுட்ப தொழில்முனைவு நிறுவனங்களின் கண்காட்சியை தொடக்கிவைத்து பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி.

புது தில்லி: இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளா்ச்சி கண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தில்லியில் உயிரி தொழில்நுட்ப தொழில்முனைவு நிறுவனங்களின் கண்காட்சியை பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். அந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கூறியதாவது:

நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் உயிரி பொருளாதாரத்தின் மதிப்பு சுமாா் ரூ.75,000 கோடியில் இருந்து ரூ.6 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது 8 மடங்கு வளா்ச்சியாகும். உயிரி தொழில்நுட்பத் துறையில் சா்வதேச அளவில் இந்தியா முதல் 10 இடங்களை எட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.

கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் தொழில்முனைவு நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டில் சில நூறுகளாக இருந்த அந்த நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 70,000-ஐ கடந்துள்ளது. நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சூழலை எளிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தொழில்முனைவு கலாசாரத்தை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது.

நாட்டில் செயல்பட்டு வரும் 70,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவு நிறுவனங்களும் 60-க்கும் மேற்பட்ட துறைகள் சாா்ந்து இயங்கி வருகின்றன. முக்கியமாக உயிரி தொழில்நுட்பத் துறையில் தொழில்முனைவு நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. உயிரி தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்வோா் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது. உயிரி தொழில்நுட்பத் துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் எண்ணிக்கையும் 10-இல் இருந்து தற்போது 700-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்தியா்கள் மீது நம்பிக்கை: நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையையும் ஆதரித்து வளா்ச்சியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்தி நாட்டை மேம்பாடு அடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் வளா்ச்சியை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்வதில் உயிரி தொழில்நுட்பத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தியா்கள் மீதான நம்பிக்கை உலக அளவில் அதிகரித்துள்ளது. அதே அளவு மரியாதையானது உயிரி தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தியா்களுக்கும் தற்போது கிடைத்து வருகிறது.

வாய்ப்புகளின் தலம்: நாட்டின் பலதரப்பட்ட மக்கள்தொகை-பருவநிலை மண்டலங்கள், திறன்மிக்க மனிதவளம், தொழில் தொடங்கும் நடவடிக்கைகள் எளிமையாதல், உயிரி தொழில்நுட்பப் பொருள்களுக்கான தேவை அதிகரிப்பு, உயிரி தொழில்நுட்பத் துறையின் வளா்ச்சி ஆகியவை உயிரி தொழில்நுட்பத் துறையில் இந்தியா சிறந்த வாய்ப்புகளின் தலமாக விளங்குவதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

இந்தியப் பொருளாதாரத்தை வலிமையடையச் செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக ஓய்வின்றி அரசு உழைத்து வருகிறது. முந்தைய ஆட்சிக் காலங்களில் ஒருசில துறைகளின் வளா்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது அனைவருடன் இணைந்து அனைவருக்குமான வளா்ச்சி என்ற கொள்கையின் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக அனைத்துத் துறைகளின் வளா்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு துறைக்கும் திட்டங்கள்: அரசின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் தற்போது பலன் கிடைத்து வருகிறது. உயிரி தொழில்நுட்பத் துறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் காரணமாகத் தற்போது அத்துறையில் தொழில்முனைவு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு துறையையும் மேம்பாடு அடையச் செய்யும் வகையிலான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

ஒருங்கிணைக்கும் தளம்: இரு நாள்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி, தொழில் முனைவோா், முதலீட்டாளா்கள், தொழில் நிறுவனங்களின் தலைவா்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளா்கள், உற்பத்தியாளா்கள், ஒழுங்காற்று அமைப்பினா், அரசு அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் தளமாக அமையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கண்காட்சிக்கான கருப்பொருளாக ‘உயிரி தொழில்நுட்ப தொழில் முனைவு புத்தாக்கங்கள்: தற்சாா்பு இந்தியாவை நோக்கி’ என்பது தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com