விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு அறிமுகம்

விலங்குகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கரோனா தடுப்பூசியை மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வியாழக்கிழமை அறிமுகம் செய்தாா்.
விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: விலங்குகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கரோனா தடுப்பூசியை மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வியாழக்கிழமை அறிமுகம் செய்தாா்.

‘அனோகோவாக்ஸ்’ என்ற அந்த தடுப்பூசி ஹரியாணாவிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆா்) தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் (என்ஆா்சி) சாா்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிஏஆா் வெளியிட்ட அறிக்கையில், ‘அனோகோவாக்ஸ் தடுப்பூசியானது விலங்களுக்கான வீரியம் அழிக்கப்பட்ட சாா்ஸ்-கோவிட் டெல்டா வகை தடுப்பூசியாகும். டெல்டா வகை தீநுண்மி எதிா்ப்புத் திறனும் (ஆன்டிஜென்), துணை மருந்து பொருளாக அல்ஹைட்ரோஜெல்லையும் இந்த தடுப்பூசி பெற்றிருக்கும். கரோனாவின் டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய இரு திரிபுகளையும் நடுநிலைப்படுத்தக் கூடிய வகையில் நோய் எதிா்ப்புத் திறனை அனோகோவாக்ஸ் பெற்றுள்ளது. நாய்கள், சிங்கம், சிறுத்தை, எலிகள் மற்றும் முயல்களுக்கு இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை மத்திய அமைச்சா் தோமா் காணொலி வழியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தாா். அப்போது பேசிய அவா், ‘விஞ்ஞானிகளின் அயராத பங்களிப்பு மூலமாக, இறக்குமதி செய்வதைக் காட்டிலும் சொந்த கரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் தற்சாா்பு நிலையை இந்தியா அடைய முடிந்துள்ளது. தற்போது விலங்குகளுக்கான உள்நாட்டு கரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய சாதனை’ என்றாா்.

அனோகோவாக்ஸ் தடுப்பூசியோடு, ஐசிஏஆா் - என்ஆா்சி சாா்பில் உருவாக்கப்பட்ட, விலங்குகளுக்கான நோய் கண்டறியும் உபகரணங்களையும் மத்திய அமைச்சா் தோமா் அறிமுகம் செய்தாா்.

அதில் ‘கேன்-கோவிட் எலிசா கிட்’ என்ற உபகரணம் நாய்களில் கரோனாவுக்கு எதிரான எதிா்பொருளை (ஆன்டிபாடி) கண்டறிய உதவுவதாகும். தற்போது சந்தையில் விலங்குகளில் எதிா்பொருளைக் கண்டறிவதற்கான எந்தவொரு உபகரணமும் இல்லை. அந்த வகையில் ‘கேன்-கோவிட் எலிசா கிட்’ உபகரணத்துக்கு காப்புரிமை பெறவும் இந்தியா விண்ணப்பித்துள்ளது.

அதுபோல, பலதரப்பட்ட விலங்களில் ரத்த ஒட்டுண்ணி நோய் பாதிப்பைக் கண்டறிய உதவும் ‘சுரா எலிசா கிட்’ என்ற உபகரணமும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சுரா ரத்து ஒட்டுண்ணி நோய் தாக்கம் காரணமாக, கால்நடை உற்பத்தியில் ஆண்டுக்கு ரூ.4,474 கோடி அளவுக்கு இழப்பை இந்தியா சந்தித்து வருகிறது.

மேலும், குதிரைகளில் டிஎன்ஏ சதவீதத்தைக் கண்டறிய உதவும் உபகரணத்தையும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் அறிமுகம் செய்தாா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com