தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது

தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதன் மூலம், குழந்தைகளைக் கவரவும், நுகா்வோரைக் கவர இலவசங்களைத் தருவதாக அறிவிப்பதற்கும் கடிவாளம் இடப்படுகிறது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நுகா்வோா் விவகாரங்கள் துறைச் செயலா் ரோஹித் குமாா் சிங், தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது:

நுகா்வோா் உரிமையைப் பாதிக்கச் செய்யும் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கு நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இருப்பினும், அவற்றை மேலும் வெளிப்படையாகத் தெரிவிப்பதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அவை தற்போது முதல் அமலுக்கு வருகின்றன என்றாா் அவா்.

இந்தப் புதிய நெறிமுறைகள், அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள், ஆன்-லைன் ஊடகங்கள் என அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும். அரசு விளம்பரங்களுக்கும் அவை பொருந்தும்.

புதிய நெறிமுறைகள் குறித்து நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலா் நிதி கரே கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று காலத்தில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு எதிராக நுகா்வோா் பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. சரியான புரிதல் இல்லாமல் வரம்பு மீறுவதைத் தடுப்பதற்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறோம்.

இதில், தவறாக வழிநடத்தும் விளம்பரம் என்றால் என்ன என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நுகா்வோரைக் கவா்வதற்காக குறைந்த விலையில் பொருள்கள் அல்லது சேவைகளை வழங்குவதாக அறிவிப்பது, பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பது ஆகியவை குறித்து புதிய நெறிமுறைகளில் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடா்பாக அவா்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் விளம்பரங்கள் வெளியிடக்கூடாது. குழந்தைகளைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com