
உத்தரப் பிரதேசத்தில் மேற்கொண்டு கட்டடங்கள் எதுவும் இடிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசை அறிவுறுத்தக்கோரி ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது.
ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு சார்பாக கபீர் தீக்சித் மற்றும் சரிம் நாவேத் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டத்துக்குப் புறம்பாக வீடுகளை இடித்ததற்குக் காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில அரசை அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சூழலில் வடமேற்கு தில்லியில் தண்டனைச் செயலாக வீடுகளை இடித்தபோது, அதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்த நிலையில், இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர்கள் கூறிய சர்ச்சைக் கருத்துக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் பிரயக்ராஜ் மற்றும் சஹரன்பூரில் போராட்டம் வெடித்து வன்முறையில் முடிந்தது.
இதனிடையே, முகமது ஜாவேத் என்பவரது வீடு உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதால் அதை இடிக்குமாறு பிரயக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது. பிரயக்ராஜில் ஜூன் 10-ம் தேதி வன்முறை வெடித்ததற்கு சதித் திட்டம் தீட்டியதில் ஜாவேத் முக்கியமானவராக அடையாளம் காணப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.