குவைத் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 பெண்கள்

குவைத் குடும்பங்களுக்கு அடிமையாக இருந்து வீட்டு வேலை செய்ய, தலா ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டு, கேரளம் அழைத்துவரப்பட்டனர்.
குவைத் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 பெண்கள்
குவைத் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 பெண்கள்


கொச்சி: குவைத் குடும்பங்களுக்கு அடிமையாக இருந்து வீட்டு வேலை செய்ய, தலா ரூ.10 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டு, கேரளம் அழைத்துவரப்பட்டனர்.

குவைத் நாட்டிலிருக்கும் மலையாளிகளின் நல அமைப்பு தலையிட்டு, உரிய நேரத்தில் பெண்களை மீட்டுள்ளது.

இதற்குப் பின்னணியில் இருந்த கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு துபையில் வாழ்ந்து வரும் எம்.கே. கஸ்ஸாலி, மூன்று பெண்களையும் விடுவிக்க வேண்டும் என்றால் பல லட்சம் பணம் கொடுக்குமாறு, பெண்களின் குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, மூவரில் ஒரு பெண்ணின் கணவர், குவைத்தில் இருக்கும் மலையாளிகளின் நல அமைப்புக்கு தனது மனைவி படும் இன்னல்கள் குறித்து விடியோ மற்றும் ஆடியோவை அனுப்பி, வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், வேலைக்கு ஆள்கள் வேண்டும் என்ற விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்துபோனோம். விசா மற்றும் விமான டிக்கெட்டுக்குக் கூட பணம் வேண்டாம் என்று கூறினார்கள். மாதம் 60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னதால் மனைவி குவைத்துக்கு வேலைக்குச் சென்றார் என்கிறார் கண்ணீரோடு.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கேரளத்திலிருந்து பெண்களை சுற்றுலா விசா மூலம் ஷார்ஜா கொண்டு சென்று அங்கிருந்து குவைத்துக்கு சாலை வழியாக அழைத்துச் செல்கிறார்கள். குவைத்திலிருக்கும் மிகப்பணக்கார குடும்பங்களுக்கு ஒவ்வொரு பெண்களையும் தலா ரூ.10 லட்சத்துக்கு விற்றுவிடுகிறார்கள். இதெல்லாம் நடந்து பல நாள்களுக்குப் பிறகுதான், அப்பெண்கள், தாங்கள் இந்த குடும்பங்களுக்கு விற்கப்பட்டுவிட்டோம் என்பதையே அறிகிறார்கள்.

பல்வேறு துன்புறுத்தல்களையும் தாண்டி, நல்லவேளையாக, எங்களது செல்லிடப்பேசிகளை நாங்களே வைத்துக் கொள்ள அவர்கள் அனுமதித்தது மட்டுமே, நாங்கள் தப்பிக்க பேருதவியாக இருந்தது என்கிறார்கள் கண்ணீர்மல்க அப்பெண்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com