
தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பெண் தொண்டர்களை கைது செய்யும் பெண் காவலர்கள்.
ஊழலை மறைப்பதற்காக காங்கிரஸ் வன்முறைப் போராட்டம் நடத்தி வருவதாகவும், சத்தியாகிரகம் என்ற பெயரில் ஊழலை மறைக்க அக்கட்சி முயற்சிப்பதே உண்மை என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஸý திரிவேதி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: மகாத்மா காந்தி நாட்டில் வன்முறைக்கு எதிராகவே ஒத்துழையாமை இயக்கத்துக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், ஊழல் விசாரணைக்கு எதிராக தற்போது காங்கிரஸ் நடத்தும் வன்முறைப் போராட்டம் அக்கட்சி எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.
அமலாக்கத் துறை முன்பு விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி அக்கட்சியின் தலைவரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ இல்லை. இருப்பினும் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் தங்கள் வலிமையைக் காட்டுவதன் மூலம் அக்கட்சி தற்போது ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டதையே காட்டுகிறது.
சத்தியாகிரகம் என்ற பெயரில் தங்கள் தலைமையின் ஊழலை மறைப்பதற்காக காங்கிரஸ் வன்முறைப் போராட்டம் நடத்துகிறது என்பதே உண்மை. நாடு முழுவதும் அக்கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் வன்முறைகளும் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஷேக் ஹுசைன் அண்மையில் பிரதமர் மோடியைப் பற்றி இழிவாகப் பேசியதையும், அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடியை மரண வியாபாரி என்று கூறியதையும் பற்றி கேட்கிறீர்கள், "அதுபோன்ற வெறுக்கத்தக்க கருத்துகளை அக்கட்சி தெரிவிப்பதன் மூலம் அக்கட்சியின் மனநிலை எந்த அளவில் தாழ்ந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்' என்றார்.