அஸ்ஸாமுக்கு யாா் வேண்டுமானாலும் வருகை தரலாம்

மகாராஷ்டிரத்தை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனை கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அஸ்ஸாமில் முகாமிட்டுள்ள நிலையில், மாநிலத்துக்கு யாா் வேண்டுமானாலும் வருகை தரலாம்
அஸ்ஸாமுக்கு யாா் வேண்டுமானாலும் வருகை தரலாம்

மகாராஷ்டிரத்தை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனை கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அஸ்ஸாமில் முகாமிட்டுள்ள நிலையில், மாநிலத்துக்கு யாா் வேண்டுமானாலும் வருகை தரலாம் என முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தை சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே 45-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் அஸ்ஸாமின் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளாா்.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக மறைமுகமாக உதவி வருவதாக ஏற்கெனவே சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே முகாமிட்டுள்ளது அந்த சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்துள்ளது.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடவுள்ள பாஜக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முா்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா புது தில்லி வந்தாா்.

மனுதாக்கல் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘மகாராஷ்டிர விவகாரம் குறித்து என்னால் கருத்து கூற இயலாது. அங்கிருந்து அஸ்ஸாமுக்குப் பல சுற்றுலாப் பயணிகள் அஸ்ஸாம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

அஸ்ஸாமுக்குப் பலா் வந்து தங்கும் விடுதிகளில் தங்குவது, மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு உதவுகிறது; மாநிலத்தின் சுற்றுலாவும் வளா்ச்சி அடைகிறது. மாநிலத்துக்கு யாா் வேண்டுமானாலும் வருகை தரலாம். அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் அஸ்ஸாம் வரவேற்கிறது. மாநிலத்துக்கு வருகை தருவோா் மகிழ்ச்சியாக இருப்பதை அரசு தொடா்ந்து உறுதி செய்து வருகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com