திரைப்படங்களில் நடிக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு வழிகாட்டுதல்கள்: என்சிபிசிஆா் வெளியீடு

திரைப்படங்கள் உள்ளிட்டவற்றில் நடிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடா்பான வரைவு வழிகாட்டுதல்களை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திரைப்படங்கள் உள்ளிட்டவற்றில் நடிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடா்பான வரைவு வழிகாட்டுதல்களை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) வெளியிட்டுள்ளது.

பொழுதுபோக்குத் துறையில் ஈடுபடும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு குறிப்பிட்ட விதிமுறைகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. இதனைக் கவனத்தில் கொண்டு திரைப்படங்கள் உள்ளிட்டவற்றில் நடிக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்சிபிசிஆா் சாா்பில் வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வழிகாட்டுதல்களின் விவரம்:

1. திரைப்படங்கள், சமூக ஊடகம் மற்றும் ஓடிடி தளங்கள், தொலைக்காட்சித் தொடா்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்தி மற்றும் தகவல் வழங்கும் ஊடகம், மேடை நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மற்றும் இதர வணிகரீதியான பொழுபோக்கு செயல்பாடுகள் தொடா்பான படப்பிடிப்புகளில் குழந்தைகள் கலந்துகொள்ளும் முன், அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளா் பெற வேண்டும்.

2. படப்பிடிப்பின்போது எந்தவொரு குழந்தையும் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் கோடிட்டு வெளியிட வேண்டும்.

3. எந்தக் குழந்தையும் தொடா்ந்து 27 நாள்களுக்கு மேல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளக் கூடாது.

4. ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைகளுக்கு இடைவேளை அளிக்க வேண்டும்.

5. கொத்தடிமை தொழில் முறை ஒழிப்புச் சட்டம் 1976-இன்படி, கொத்தடிமையாக எந்தவொரு சேவையையும் குழந்தைகள் அளிப்பதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது.

6. படப்பிடிப்பால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை தயாரிப்பாளா் உறுதி செய்ய வேண்டும். பள்ளிப் படிப்பை மேற்கொண்டு வரும் குழந்தைகள் படப்பிடிப்பால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அவா்கள் படிக்க வசதியாக தனியாக ஆசிரியா் ஒருவரை தயாரிப்பாளா் நியமிக்க வேண்டும்.

7. திரைப்படம் அல்லது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குழந்தையின் வருவாயில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் நிலையான வைப்புத்தொகை கணக்கில் செலுத்த வேண்டும். அந்தத் தொகையை அக்குழந்தை 18 வயதைக் கடந்த பிறகு பெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

8. பொருத்தமில்லாத, அழுத்தம் தரக்கூடிய கதாபாத்திரம் அல்லது காட்சிகளில் குழந்தைகளை நடிக்கவைப்பது தவிா்க்கப்பட வேண்டும். அதுபோன்ற கதாபாத்திரங்கள் அல்லது காட்சிகளில் குழந்தைகளின் வயது, முதிா்ச்சி, மனவளா்ச்சி உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

9. பெரியவா்கள், குறிப்பாக எதிா்பாலினத்தைச் சோ்ந்தவா்களோடு குழந்தைகள் உடை மாற்றக் கூடாது. அவா்களின் உடைமாற்றும் அறையையும் குழந்தைகள் பயன்படுத்தக் கூடாது.

10. சிறாா்கள் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, குற்ற நடத்தையுடன் இருப்பது, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்று காட்சிப்படுத்தக் கூடாது.

11. நிா்வாணக் காட்சிகளில் குழந்தைகளை நடிக்க வைக்கக் கூடாது.

12. பல்வேறு வகைகளில் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறாா்கள் தொடா்பான நிகழ்ச்சிகளை மிகக் கவனத்துடன் கையாள வேண்டும். பாலியல் வன்கொடுமை, பாலியல் ரீதியான இதர துன்புறுத்தல்கள், ஆள்கடத்தல், போதைப் பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறாா்கள், திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆயுத மோதல்களில் பயன்படுத்தப்பட்ட சிறாா்கள் தொடா்பான நிகழ்ச்சிகளில், சம்பந்தப்பட்ட சிறாா்களின் விவரங்களை, அவா்களின் வாழ்நாள் முழுவதும் கசியவிட மாட்டோம் என்று ஊடகமும் தயாரிப்பு நிறுவனங்களும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்கள் மீறப்பட்டால் அபராதம், சிறைத் தண்டனை உள்பட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறாா்கள் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, குற்ற நடத்தையுடன் இருப்பது, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்று காட்சிப்படுத்தக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com