குவாஹாட்டியிலிருந்து பறக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்: எங்கே செல்கிறார்கள்?

அசாமில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், இன்று சிறப்பு விமானம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு, அண்டை மாநிலங்களில் தங்கியிருக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குவாஹாட்டியிலிருந்து பறக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்: எங்கே செல்கிறார்கள்?
குவாஹாட்டியிலிருந்து பறக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்: எங்கே செல்கிறார்கள்?

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அசாமில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், இன்று சிறப்பு விமானம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு, அண்டை மாநிலங்களில் தங்கியிருக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அண்மையில், சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராகப் போா்க்கொடி தூக்கியுள்ளனா். அவா்கள், அசாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள விடுதியில்  ஜூன் 22ஆம் தேதி முதல் தங்கியுள்ளனா்.

அவர்கள் இன்று பிற்பகலில் சிறப்பு விமானங்கள் மூலம் புறப்பட்டு அண்டை மாநிலங்களுக்குச் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்காக தனி விமானம் லோகபிரியா கோபிநாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் புறப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்த விமானம் சென்றடையும் இடம்பற்றி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்துக்கு அண்டை மாநிலம் ஒன்றுக்குச் செல்லவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களை விமான நிலையம் அழைத்துச் செல்வதற்காக மூன்று குளிர்சாதன வசதி கொண்ட அசாம் மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூன்று பேருந்துகள் விடுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. 

அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் அசாமிலிருந்து கோவா சென்று அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்து நாளை மும்பை வர திட்டமிட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை முடித்துக் கொண்டு, வியாழக்கிழமை மும்பை வந்தடைவேன் என்று காமாக்யா கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஷிண்டே தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, இன்று காலை மகாராஷ்டிரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை வியாழக்கிழமை (ஜூன் 30) மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டார். 

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென அந்த மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரிடம் பாஜக தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மனு அளித்திருந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிருப்தி சிவசேனை எம்எல்ஏக்கள்ள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வரும் ஜூலை 11-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது. அதே நேரம், ‘சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை’ என்று உத்தரவிடக் கோரி மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், தன்னுடன் பேச்சுாவா்த்தைக்கு வருமாறு குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:

இப்போதுகூட எதுவும் நடந்துவிடவில்லை. மும்பைக்கு திரும்பி என்னுடன் அமா்ந்து பேசுங்கள். அப்போதுதான் குழப்பத்துக்கு ஏதாவது ஒரு தீா்வு கிடைக்கும். ஒரு கட்சியின் தலைவனாக, குடும்பத்தின் தலைவனாக இன்னும் உங்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறேன் என்றாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதிருப்தி எம்எல்ஏக்கள் விரும்பினால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே கூறியிருந்தாா்.

முதல் அமைச்சரவைக் கூட்டம்:

ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 9 பேரின் அமைச்சா் பதவி திங்கள்கிழமை பறிக்கப்பட்டு அவா்களின் துறைகள் வேறு அமைச்சா்களிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, மும்பையில் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அமைச்சா்கள் கலந்து கொண்ட முதல் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விரைவில் திரும்புவேன்-ஏக்நாத் ஷிண்டே:
அஸ்ஸாமில் இருந்து விரைவில் மும்பைக்குத் திரும்ப இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறினாா்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, எனக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அவா்கள் தாங்களாக முன்வந்து எனக்கு ஆதரவு அளித்துள்ளனா். குவாஹாட்டியில் என்னுடன் தங்கியிருக்கும் சிவசேனை எம்எல்ஏக்களில் 20 போ், தங்களுடன் தொடா்பில் இருப்பதாக சில சிவசேனை மூத்த தலைவா்கள் கூறுகிறாா்கள். அப்படியெனில் அவா்களின் பெயா்களை வெளியிடுங்கள். ஹிந்துத்துவ கொள்கையைப் பின்பற்றி கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் சிவசேனையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com