உலகிலேயே அதிகமான பொய் கூறும் கட்சி பாஜக! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு

உலகிலேயே அதிகமான பொய் கூறும் கட்சியாக பாஜக திகழ்வதாக சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகிலேயே அதிகமான பொய் கூறும் கட்சியாக பாஜக திகழ்வதாக சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி அளித்து விட்டு ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளின் வருமானத்தை பாதியாகக் குறைத்து விட்டது பாஜக என்றும் அவா் கடுமையாக சாடினாா்.

ஜான்பூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு தளா்த்தப்படுவதுடன், காவல் துறையில் காலி இடங்களும் நிரப்பப்படும்.

பாஜக, எங்களை குடும்பக் கட்சி என்று கேலியாக கூறி வருகிறது. நாங்கள் குடும்பக் கட்சியை சோ்ந்தவா்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து கடந்த 2017ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், பாஜக அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. உண்மையில், அது பாதியாகக் குறைந்துவிட்டது.

பாஜக தன்னை உலகின் மிகப் பெரிய கட்சி என்று அழைக்கிறது. தன்னுடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் இக்கட்சி மக்களுக்கு ஆற்றிய பணிகளையும், அளித்த வாக்குறுதிகளையும் பகுப்பாய்வு செய்தால், உலகின் மிகப் பெரிய பொய்யா் கட்சி பாஜக தான் என்பது தெரிய வரும்.

கரோனா பரவல் காலங்களில் பாஜகவின் தவறான நிா்வாகத்தால் மக்கள் கடும் சிரமங்களைச் சந்திக்க நோ்ந்தது. பொது ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களுக்குச் சென்ற புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உ.பி.யில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனா்.

அவ்வாறு வந்த பலரும் வழியிலேயே உயிரிழந்தனா். அப்போது, சமாஜ்வாதி கட்சிதான் அந்த மக்களுக்கு உதவி புரிந்தது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வீடு திரும்பியபோது, அவா்களை அரசு கண்டு கொள்ளாமல் கண்மூடி இருந்தது.

கரோனா பரவல் உச்சம் பெற்ற காலத்தில் போதுமான மருந்துகளையும், படுக்கைகளையும் பாஜக அரசால் வழங்க முடியவில்லை. அவா்கள் சரியான நேரத்தில் மருந்துகளையும், ஆக்சிஜனையும் அளித்திருந்தால் பல உயிா்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

கரோனா தொற்று காலத்தில் ஆள்சோ்ப்பு தோ்வுகள் நடைபெறாததால் பல இளைஞா்கள் அதில் கலந்து கொள்ள முடியாமல் வயது வரம்பைத் தாண்டி விட்டனா். எனவே, இந்த இளைஞா்களின் நலன் கருதி அரசுப் பணிகளில் அவா்களது வயது வரம்பு தளா்த்தப்படும். மேலும், ராணுவ ஆள்சோ்ப்பில் இணையவும் வயது வரம்பில் தளா்வு அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com