உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சிக்கு பாராட்டுகள்: உச்ச நீதிமன்றம்

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வரும் பணியை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


புது தில்லி:  உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வரும் பணியை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பான மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்த போது, போர் நடைபெற்று வரும் உக்ரைனிலிருந்து இதுவரை சுமார் 17 ஆயிரம் இந்திய மாணவர்கள் பத்திரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

மேலும், இந்திய மாணவர்களின் மீட்புப் பணியில் 130 ரஷ்ய பேருந்துகள் ஈடுபடுத்தப்படுகின்றன. ரஷ்ய பேருந்துகள் மூலம் இந்திய மாணவர்களை உக்ரைனின் எல்லைப் பகுதிகளுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்கு எங்களது பாராட்டுகள். அந்த முயற்சிகள் குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அதே வேளையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்களின் நிலைகுறித்து கவலை தெரிவிக்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

உக்ரைனில் ரஷியா தாக்குதலைத் தொடர்ந்து வருவதால், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ருமேனியா எல்லைக்கு அருகே சிக்கியுள்ள பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ மாணவியான ஃபாத்திமா அஹானா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், "உக்ரைனில் இருந்து ருமேனியாவுக்குச் சென்றடைவதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். உக்ரைனில் சிக்கியுள்ள அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது. 

அந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமர்வு அவசர வழக்காக வியாழக்கிழமை விசாரித்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.எம்.தார் வாதிடுகையில், "ருமேனிய எல்லையில் கடும் குளிருக்கு மத்தியில் இந்திய மாணவர்கள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்காக இந்திய அரசு விமானங்களை முறையாக இயக்கவில்லை. ஹங்கேரி, போலந்து நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. மாணவிகள் உள்பட பலர் எந்தவித வசதியும் இன்றி தவித்து வருகின்றனர்' என்றார். 

ரஷிய அதிபருக்கு உத்தரவிட முடியுமா? மனுதாரர் வாதத்தையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை எண்ணி அனைவரும் கவலை கொள்கிறோம்.  ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்? போரை நிறுத்துமாறு ரஷிய அதிபருக்கு நாங்கள் உத்தரவிட முடியுமா?' எனக் கேள்வி எழுப்பி, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை நீதிமன்றத்துக்கு வரவழைத்தனர்.  

பின்னர் அவரிடம் நீதிபதிகள் கூறுகையில், "இதேபோல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிக்கியுள்ளனர். சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது என நீதிமன்றம் கூற இயலாது. மாணவர்களை மீட்கும் விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் தகுந்த முறையில் உதவ வேண்டும்'' என்றார். 

அட்டர்னி ஜெனரல் கூறுகையில், ""மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக ருமேனியாவுக்கு மத்திய அமைச்சர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய, உக்ரைன் அதிபர்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்' என்று பதிலளித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com