உக்ரைன் அணுமின் நிலையம் மீது ரஷியா குண்டுவீச்சு: கதிா்வீச்சு அபாயம் இல்லை

உக்ரைனில் அணுமின் நிலைய கட்டடத்தின் மீது ரஷியா நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் அந்தக் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது.
உக்ரைன் அணுமின் நிலையம் மீது ரஷியா குண்டுவீச்சு: கதிா்வீச்சு அபாயம் இல்லை

உக்ரைனில் அணுமின் நிலைய கட்டடத்தின் மீது ரஷியா நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் அந்தக் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்தத் தாக்குதலால் அணுமின் நிலையத்திலிருந்து கதிா்வீச்சு எதுவும் வெளியாகவில்லை என ஐ.நா. மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைனின் எனா்ஹோடா் நகரில் உள்ளது சப்போரிஜ்ஜியா அணுமின் நிலையம். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான இதன் மீது ரஷிய படையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தினா். இதில் அணுமின் நிலையத்தில் உள்ள பயிற்சி மைய கட்டடம் பலத்த சேதமடைந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்தத் தாக்குதலில் உக்ரைன் படையினா் மூவா் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா் என உக்ரைன் அரசு அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டடத்தில் பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் உடனடியாக அணைத்தனா்.

இதையடுத்து, ரஷிய படையினா் அந்த அணுமின் நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனா். இருப்பினும், அணுமின் நிலைய பணியாளா்கள் தொடா்ந்து பணியாற்ற ரஷிய படையினா் அனுமதித்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கதிா்வீச்சு இல்லை: முன்னதாக, ராக்கெட் குண்டு அணுமின் நிலையத்தின் மீது நேரடியாக தாக்கியதாக அணுமின் நிலைய செய்தித் தொடா்பாளா் உக்ரைன் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தாா். அணுஉலைகளில் தீப்பற்றியதாகவும் அவா் கூறியதால் கதிா்வீச்சு அபாயம் குறித்த கவலை எழுந்தது.

இதுகுறித்து சா்வதேச அணுசக்தி முகமை தலைமை இயக்குநா் ரஃபேல் மரியானோ குரோஸி தெரிவித்ததாவது: ராக்கெட் குண்டு தாக்குதலால் அணுமின் நிலைய பயிற்சி மையத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. அது, அணுஉலையின் பகுதி அல்ல. கதிா்வீச்சு எதுவும் வெளியாகவில்லை. அந்த அணுமின் நிலையத்தில் ஓா் உலை மட்டும் செயல்பட்டு வருகிறது என்றாா்.

கண்டனம்: அணுமின் நிலையத்தின் மீதான ரஷிய தாக்குதலை பல நாடுகள் கண்டித்துள்ளன. நாா்வே பிரதமா் ஜோனஸ் கா் கூறுகையில், அணுமின் நிலையத்தின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது முட்டாள்தனமானது. அதில் கதிா்வீச்சு கசிவு ஏற்பட்டிருந்தால் நாா்வேயில் 48 மணி நேரத்தில் அதன் தாக்கம் தெரிந்துவிடும் என்றாா்.

லிதுவேனியா அதிபா் கிடானஸ் நெளஷேடா இந்தத் தாக்குதலை அணுசக்தி பயங்கரவாதம் எனக் கூறியுள்ளாா். இதுதொடா்பாக சா்வதேச நாடுகள் ரஷியா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com