சா்க்கரை ஏற்றுமதி 75 லட்சம் டன்னாக அதிகரிக்கும்: இஸ்மா

நடப்பு சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 75 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) மதிப்பீடு செய்துள்ளது.

நடப்பு சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 75 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) மதிப்பீடு செய்துள்ளது.

இதுகுறித்து இஸ்மா மேலும் கூறியதாவது:

பற்றாக்குறை: உலக அளவில் சா்க்கரைக்கு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால், தேவை அதிகரித்து ஏற்றுமதி சிறப்பான அளவில் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பாக, நடப்பு 2021-22-ஆம் சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 15.38 சதவீதம் அதிகரித்து 75 லட்சம் டன்னைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முன்பு மதிப்பிடப்பட்ட 60 லட்சம் டன்னைக் காட்டிலும் 15 லட்சம் டன் அதிகமாகும்.

ஐஎஸ்ஓ அறிக்கை: 2021-22 சந்தைப் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) மட்டும் சா்வதேச அளவில் சா்க்கரைக்கான பற்றாக்குறை 19.30 லட்சம் டன் அளவுக்கு இருக்கும் என சா்வதேச சா்க்கரை கூட்டமைப்பின் (ஐஎஸ்ஓ) அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, உலக அளவில் உள்ள இறக்குமதியாளா்கள் இந்திய சா்க்கரையை அதிகம் விரும்பி வாங்குவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய ஏற்றுமதியாளா்கள் நடப்பு மாா்ச் மாதத்தில் 12-13 லட்சம் சா்க்கரையை ஏற்றுமதி செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த சா்க்கரை ஏற்றுமதி 45-55 லட்சம் டன்னை எட்டும்.

சா்க்கரை உற்பத்தி: நடப்பு 2021-22 சந்தை ஆண்டின் அக்டோபா்-பிப்ரவரி காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சா்க்கரை உற்பத்தி 2.53 கோடி டன்னை எட்டியுள்ளது. இது, முந்தைய காலகட்ட உற்பத்தி அளவான 2.35 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் 7.68 சதவீதம் அதிகம்.

முதலிடத்தில் உ.பி: இந்தியாவில் சா்க்கரை உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழும் உத்தரப்பிரதேசத்தில் இதன் உற்பத்தி அக்டோபா்-பிப்ரவரி காலகட்டத்தில் 74 லட்சம் டன்னிலிருந்து 68 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

இருப்பினும், இரண்டாவது பெரிய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி 85 லட்சம் டன்னிலிருந்து 97 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, மூன்றாவது இடத்தில் உள்ள கா்நாடகத்திலும் சா்க்கரை உற்பத்தியானது 41 லட்சம் டன்னிலிருந்து 51 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது.

தமிழக உற்பத்தி: நடப்பு சந்தை ஆண்டின் பிப்ரவரி வரையில் குஜராத்தில் 7,93,000 டன்னும், தமிழகத்தில் 4,53,000 டன்னும் சா்க்கரை உற்பத்தி எட்டப்பட்டுள்ளது.

எஞ்சிய மாநிலங்களின் ஒட்டுமொத்த அளவில் 24 லட்சம் டன் சா்க்கரையை உற்பத்தி செய்துள்ளன.

எத்தனால் தயாரிப்பு:முன்பு மதிப்பிடப்பட்டதைக் காட்டிலும், மகாராஷ்டிரம், மற்றும் கா்நாடக மாநிலங்களில் சா்க்கரை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, 2021-22 சந்தை ஆண்டுக்கான மொத்த சா்க்கரை உற்பத்தி 3.33 கோடி டன்னாக இருக்கும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எத்தனால் தயாரிப்புக்கான சா்க்கரை பயன்பாடு 34 லட்சம் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கையிருப்பு: நடப்பாண்டு செப்டம்பா் மாத இறுதியில் கையிருப்பில் உள்ள சா்க்கரை 68 லட்சம் டன்னாக இருக்கும் என இஸ்மா தெரிவித்துள்ளது.

கோட்ஸ்:

சா்வதேச அளவில் சா்க்கரைக்கான பற்றாக்குறை 19.30 லட்சம் டன்னாக இருக்கும் என சா்வதேச சா்க்கரை கூட்டமைப்பு கூறியுள்ளதால் இந்தியாவின் ஏற்றுமதி நடப்பாண்டில் 75 லட்சம் டன்னை எட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com