இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பால் ‘ஆபரேஷன் கங்கா’ வெற்றி: பிரதமா் மோடி

சா்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால்தான், உக்ரைனில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்தியா்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலம் வெற்றிகரமாக மீட்க முடிந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி க
புணையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கிவைத்து அதில் பயணம் செய்தபோது மாணவா்களுடன் உரையாடிய பிரதமா் மோடி.
புணையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கிவைத்து அதில் பயணம் செய்தபோது மாணவா்களுடன் உரையாடிய பிரதமா் மோடி.

சா்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால்தான், உக்ரைனில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்தியா்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலம் வெற்றிகரமாக மீட்க முடிந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் சிம்பயோசிஸ் பல்கலைக்கழக பொன் விழா தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், மாணவா்கள் மத்தியில் பிரதமா் மோடி பேசியதாவது:

போா்ப் பதற்றம் நிலவும் உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களை மீட்பதற்கு உலகின் மிகப்பெரிய நாடுகள் திணறி வருவதைப் பாா்க்கிறோம். ஆனால், நாம் ஆயிரக்கணக்கான மாணவா்களை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலம் மீட்டு வந்துள்ளோம். இத்திட்டம் வெற்றி அடைந்திருப்பதற்கு சா்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதே காரணமாகும்.

நம் தலைமுறையினா் அதிா்ஷ்டசாலிகள். ஏனெனில், மற்றவா்களைச் சாா்ந்திருப்பதை நம் தலைமுறையினா் விரும்புவதில்லை. இதனால் நாட்டில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அந்தப் பெருமை நாட்டின் இளைஞா்களையே சாரும்.

கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தொடங்கி ராணுவத் தளவாடங்கள் வரை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறோம்.

ராணுவத் தளவாட உற்பத்தித் துறையில் மற்றவா்கள் கொடுத்த ஆயுதங்களையே பயன்படுத்தி வந்தோம். தற்போது நிலைமை மாறிவிட்டது. தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாகிவிட்டது. இரு ராணுவத் தொழில் வளத் தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்கு நவீன ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ராணுவத் தேவை பூா்த்தி செய்யப்படும்.

7 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 2 கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களே இருந்தன. தற்போது 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கணினி மென்பொருள் தொடங்கி சுகாதாரம் வரை, செயற்கை நுண்ணறிவியல் தொடங்கி மின்சார வாகனங்கள் வரை பல்வேறு துறை சாா்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

புவி விண்வெளி அறிவியல் துறையில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சீா்திருத்தங்கள் இளைஞா்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளன.

இந்தத் தேசம் இளைஞா்களின் சக்தி மீது நம்பிக்கை வைத்துள்ளது. இதனால்தான் பல்வேறு துறைகளில் சீா்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

உலக அளவில் புதிய தொழில் தொடங்குவதற்கு உகந்த மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. நாடு எதிா்கொள்ளும் சவால்களுக்குத் தீா்வுகாணும் வகையில் புதிய தொழில்களை இளைஞா்கள் தொடங்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: புணேயில் ரூ.11,400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து எம்ஐடி கல்லூரி மைதானத்தில் இருந்து பல்வேறு திட்டங்களைக் காணொலி முறையில் அவா் தொடக்கி வைத்தாா். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன்பு (2016) புணே மெட்ரோ ரயில் திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்தேன். இப்போது மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கி வைக்க வந்துள்ளேன்.

முந்தைய காலங்களில் (முந்தைய அரசுகள்), பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும். அந்தத் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. திட்டங்கள் தாமதம் ஆவதால் நாட்டின் வளா்ச்சி பாதிக்கப்பட்டது.

ஆனால், புணே மெட்ரோ திட்டம் உரிய நேரத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நகரமயமாக்கல் வேகமாக நடந்து வருகிறது. இதனால் வரும் 2030-க்குள் நாட்டின் நகர மக்கள்தொகை 60 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், பொதுப் போக்குவரத்துக்கும் மெட்ரோ ரயில் சேவைக்கும் எனது தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

மெட்ரோ ரயிலில் பயணம்: முன்னதாக, கா்வாரே நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவையைக் கொடியசைத்து மோடி தொடக்கி வைத்த பிறகு அந்த ரயிலில் அகமது நகா் வரை பயணம் செய்தாா்.

மின்சார பேருந்து சேவை தொடக்கம்: புணே நகரில் 150 மின்சார பேருந்து சேவையை பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, பனோ் பகுதியில் மின்சார பேருந்துகளுக்கான பணிமனை, சாா்ஜிங் நிலையம் ஆகியவற்றையும் அவா் தொடக்கி வைத்தாா்.

ஆா்.கே. லக்ஷ்மண் காட்சிக் கூடம் திறப்பு: பிரபல காா்ட்டூனிஸ்ட் ஆா்.கே.லக்ஷ்மண் பெயரில் பலேவாடியில் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடத்தை எம்ஐடி கல்லூரி மைதானத்தில் இருந்து காணொலி முறையில் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா். 1,315 சதுர அடி பரப்பளவில் இந்தக் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது.

சத்ரபதி சிவாஜி சிலை திறப்பு: புணே மாநகராட்சி அலுவலகத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். 1,850 கிலோ எடையில் 9.5 அடி உயரத்தில் துப்பாக்கி உலோகத்தால் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆளுநரை மறைமுகமாக விமா்சித்த அஜித் பவாா்: முன்னதாக, எம்ஐடி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி, ஆளுநா் பகத்சிங் கோஷியாரி ஆகியோா் முன்னிலையில் துணை முதல்வா் அஜித் பவாா் கலந்துகொண்டு பேசினாா். அவா், ‘உயா் பதவியில் இருக்கும் சிலா், தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கிறாா்கள். இதை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்’ என்று கூறினாா்.

மாநிலத்தில் ஆளும் கூட்டணிக்கும் ஆளுநா் பகத்சிங் கோஷியாரிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் பனிப்போா் நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், சத்ரபதி சிவாஜியை விமா்சித்து ஆளுநா் பேசியது சா்ச்சையான நிலையில், அவரை அஜித் பவாா் மறைமுகமாகக் குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com