தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 29 பேருக்கு "மகளிர் சக்தி புரஸ்கார்' விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கான மகளிர் (நாரி) சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து  செவ்வாய்க்கிழமை விருது பெறும் நீலகிரியைச் சேர்ந்த  ஜெயமுத்து, தேஜம்மா, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.தாரா.
தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து செவ்வாய்க்கிழமை விருது பெறும் நீலகிரியைச் சேர்ந்த ஜெயமுத்து, தேஜம்மா, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.தாரா.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கான மகளிர் (நாரி) சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை வழங்கினார். இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்கப்பட்ட 28 விருதுகளில் சென்னையைச் சேர்ந்த மன நல மருத்துவர், நீலகிரி தோடரின கைப்பின்னல் பெண்கள் என தமிழகத்தைச் சேர்ந்த மூவர் விருது பெற்றனர்.
 சிறப்பாகச் சேவையாற்றி வரும் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆண்டு தோறும் 14 மகளிர் சக்தி விருதுகளை வழங்குகிறது.
 குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் நீலகிரி தோடர் இனப் பெண்கள் ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோர் சிக்கலான தோடரின எம்பிராய்டரி கொண்ட சால்வைகள் மற்றும் ஆடைகளை உருவாக்குவதற்காக இந்த மகளிர் சக்தி விருதை இணைந்து பெற்றனர். நீலகிரி தோடரின மக்களின் கலைப் படைப்பான இது, பெண்களால் பிரத்யேகமாக செய்யப்படும் கைப்பின்னல் ஆகும்.
 சென்னை அண்ணா நகரில் ஸ்கார்ஃப் ஆராய்ச்சி அறக்கட்டளை இணை நிறுவனர் டாக்டர் ஆர்.தாராவுக்கு 2021-ஆம் ஆண்டுக்கான மகளிர் சக்தி விருது வழங்கப்பட்டுள்ளது. மனநல மருத்துவர், ஆய்வாளரான தாரா, இந்த அமைப்பை 1984-ஆம் ஆண்டு டாக்டர் சாரதா மேனனுடன் தொடங்கினார். மனநோய் குறித்த மூட நம்பிக்கை, இத்தகைய நோயாளிகள் குறித்த தவறான கருத்துகள் போன்றவற்றை அகற்றியதற்காகவும், நோயாளிகள் தாமதமின்றி மருத்துவம் பெறுதல், மனநல நோய்க்கான விழிப்புணர்வு ஆகியவற்றை வழங்கியதற்காகவும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து புனரமைப்பு உள்ளிட்ட புதுமையான, இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டார். இதையொட்டி இவருக்கு மகளிர் சக்தி புரஸ்கார் விருது அளிக்கப்பட்டுள்ளது.
 மேலும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இவரது நிறுவனத்துக்கு இலவசமாக நிலம் ஒதுக்கித் தந்துள்ளார். அதன்மூலம் தமிழகத்தின் 7 மாவட்டங்கள், கிராமங்களுக்கு இலவச கைப்பேசி வழி மனநல மருத்துவ சேவையையும் இவரது நிறுவனம் அளித்து வருகிறது.
 மேலும், ஜோதிர்கமயா அறக்கட்டளை மூலம் பார்வையற்றோருக்கான நடமாடும் பள்ளியை நிறுவி பணிகளை மேற்கொண்டு வரும் கேரளத்தைச் சேர்ந்த பார்வையற்ற டிஃப்பனி ப்ரார், வணிகக் கடற்படையின் முதல் இந்தியப் பெண் கேப்டனான திருச்சூரைச் சேர்ந்த ராதிகா மேனன், சுமார் 50,000 பாம்புகளை மீட்டுள்ள முதல் பெண்ணான வனிதா ஜக்தியோபோரடே, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப முதல் பெண்மணியான இன்டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவரான கர்நாடகத்தைச் சேர்ந்த நிவ்ருதி ராய் என சமுதாயத்தின் ஆக்கபூர்வமான மாற்றத்திற்கு உந்துசக்தியாக விளங்கும் 29 மகளிரை அங்கீகரித்து அவர்களது பணிகளை பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com