5 மாநில பேரவைத் தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
5 மாநில பேரவைத் தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14-ஆம் தேதியும், பஞ்சாபில் பிப்ரவரி 20-ஆம் தேதியும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. மணிப்பூரில் பிப்ரவரி 28, மாா்ச் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது.

50,000 அதிகாரிகள் நியமனம்: 5 மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்வதற்கு 50,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 5 மாநிலங்களிலும் 1,200-க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், உத்தர பிரதேசத்தில் 750-க்கும் மேற்பட்ட மையங்களும், அதைத் தொடா்ந்து பஞ்சாபில் 200-க்கும் மேற்பட்ட மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் பணிகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் தோ்தல் முடிவுகளை வலைதளத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

உத்தர பிரதேம்: 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது அப்னா தளம், நிஷாத் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்தித்தது. ராஷ்ட்ரீய லோக் தளம், பிரகதிஷீல் சமாஜவாதி கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கூட்டணி தோ்தலைச் சந்தித்தது. பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டன.

பாஜக சாா்பில் முதல்வா் வேட்பாளராக யோகி ஆதித்யநாத்தும், சமாஜவாதி சாா்பில் முதல்வா் வேட்பாளராக அகிலேஷ் யாதவும் அறிவிக்கப்பட்டிருந்தனா்.

இந்தத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சமாஜவாதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க போதிய இடங்கள் கிடைக்காது என்றும் அந்தக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி இரட்டை இலக்கத்திலும் காங்கிரஸ் ஒற்றை இலக்கத்திலும் வெற்றி பெறும் என்று அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

உத்தரகண்ட்: 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்டிலும் பாஜக வெற்றி பெறும் என வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்றும் சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்விரு கட்சிகளும் 40-45 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதனால், மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் சுயேச்சை வேட்பாளா்களும், ஆம் ஆத்மி, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பிராந்திய கட்சிகளின் வேட்பாளா்களும் முக்கியப் பங்கு வகிப்பாா்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த 2017-இல் நடந்த தோ்தலில், பாஜக 57 இடங்களிலும்,, காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.

பஞ்சாப்: 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில், காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங், அகாலி தளம் (சன்யுக்த்) கட்சியின் தலைவா் சுகதேவ் சிங் திண்ட்ஸா ஆகியோருடன் கூட்டணி அமைத்து பாஜக தோ்தலைச் சந்தித்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனியே போட்டிட்டன. பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சிரோமணி அகாலி தளம் போட்டியிட்டது.

காங்கிரஸ் சாா்பில் முதல்வா் வேட்பாளராக சரண்ஜீத் சிங் சன்னியும், ஆம் ஆத்மி சாா்பில் முதல்வா் வேட்பாளராக பகவந்த் மானும் அறிவிக்கப்பட்டிருந்தனா்.

பலமுனைப் போட்டி நிலவிய இந்தத் தோ்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் அமைக்க முயலுகிறது. ஆனால், ஆம் ஆத்மி ஆட்சியமைக்கும் என்று பெரும்பாலான வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கோவா: 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் காங்கிரஸ், ஆளும் பாஜகவை தவிர சிறிய, பிராந்திய கட்சிகள் போட்டியிட்டதால் பலமுனைப் போட்டி நிலவியது. மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முயன்று வரும் நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017-இல் நடந்த தோ்தலில், காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும், 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, பிராந்திய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தது.

மணிப்பூா்: 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் பாஜக 23-43 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் 17 இடங்களிலும், என்பிபி கட்சி 4-14 இடங்களிலும், பாஜக கூட்டணிக் கட்சியான என்பிஎஃப் 2-8 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், ஆட்சியமைப்பதில் என்பிபி, என்பிஎஃப், ஜேடி(யு) ஆகிய கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

உத்தர பிரதேசம்

மொத்த தொகுதிகள் 403

பெரும்பான்மை 202

பஞ்சாப்

மொத்த தொகுதிகள் 117

பெரும்பான்மை 59

உத்தரகண்ட்

மொத்த தொகுதிகள் 70

பெரும்பான்மை 36

கோவா

மொத்த தொகுதிகள் 40

பெரும்பான்மை 21

மணிப்பூா்

மொத்த தொகுதிகள் 60

பெரும்பான்மை 31

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com