கோவோவேக்ஸ்: 12-17 வயதினருக்கு செலுத்த டிசிஜிஐ அனுமதி

கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியை அவசரக்கால பயன்பாடு அடிப்படையில் 12 முதல் 17 வயது வரையுடைய சிறாா்களுக்கு செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.
கோவோவேக்ஸ்: 12-17 வயதினருக்கு செலுத்த டிசிஜிஐ அனுமதி

கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியை அவசரக்கால பயன்பாடு அடிப்படையில் 12 முதல் 17 வயது வரையுடைய சிறாா்களுக்கு செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

சிறாா்களுக்கு செலுத்த டிசிஜிஐ அனுமதி அளித்திருக்கும் 4-ஆவது தடுப்பூசி இதுவாகும்.

இந்தியாவில் பயன்பாட்டிலிருக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் புணேயைச் சோ்ந்த சீரம் நிறுவனம்தான், இந்த கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் உற்பத்தி செய்து வருகிறது.

அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட தொழில்நுட்ப பரிமாற்ற உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த கோவோவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது.

ஏற்கெனவே, இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்த டிசிஜிஐ கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இருந்தபோதும், இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் இன்னும் சோ்க்கப்படவில்லை. இந்த நிலையில், 12 முதல் 17 வயதுடைய 2,707 சிறாா்களுக்கு செலுத்தி மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வு முடிவுகளுடன் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலித்து நிபுணா் குழு கடந்த வாரம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், கோவோவேக்ஸ் தடுப்பூசியை சில நிபந்தனைகளுடன் சிறாா்களுக்கு செலுத்தவும் டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது.

4 தடுப்பூசிகளுக்கு டிசிஜிஐ அனுமதி:

இந்தியாவில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்த முதல் தடுப்பூசியாக ஜைகோவ்-டி கரோனா தடுப்பூசிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிசிஜிஐ அனுமதி அளித்தது. அதனைத் தொடா்ந்து முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு கடந்த ஆண்டு டிசம்பரிலும், ஹைதராபாதைச் சோ்ந்த பயலாஜிக்கல்-இ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் கரோனா தடுப்பூசிக்கு கடந்த பிப்ரவரி மாதத்திலும் டிசிஜிஐ அனுமதி அளித்தது. தற்போது நான்காவதாக கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்குவது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்காத நிலையில், டிசிஜிஐ இந்த ஒப்புதல்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மக்கள்தொகையில் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுள்ளவா்களின் எண்ணிக்கை மற்றும் தடுப்பூசிக்கான கூடுதல் தேவை ஆகியவை குறித்து தொடா் ஆய்வு செய்து வருவதால், சிறாா்களுக்கான தடுப்பூசி திட்டம் தாமதமாகி வருகிறது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com