திசை மாறிய இந்தியாவை மீண்டும் காந்திய பாதையில் அழைத்து சென்றவர் மோடி: அமித் ஷா

"காந்தி வகுத்து கொடுத்த பாதையிலிருந்து இந்தியா வழி மாறி சென்றது. புதிய கல்வி கொள்கையின் மூலம் காந்தியத்தை மீண்டும் இணைத்தவர் பிரதமர் மோடி"
கோப்புப்படம்
கோப்புப்படம்

அண்ணல் காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்தியாகிரகத்தின் 92ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு குஜராத்திலிருந்து தண்டி வரையிலான சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொங்கி வைத்தார். தண்டி யாத்திரை நடைபெற்ற அதே பாதையில் சைக்கிள் மூலம் பயணிக்கவுள்ள 12 பேர், காந்தியாரின் போதனைகளை பரப்பவுள்ளனர்.

பின்னர், அகமதாபாத்தில் உள்ள கோச்ராப் ஆசிரமத்தில் பேசிய அமித் ஷா, புதிய கல்வி கொள்கை உள்பட அரசின் புதின் திட்டங்களில் காந்தியாரின் கொள்கைகள் மற்றும் போதனைகளை மோடி சேர்த்ததாக புகழாரம் சூட்டினார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "காந்தியார் காட்டிய பாதையில் இருந்து நாம் (இந்தியா) திசைமாறிப்போனதுதான் பிரச்னை. பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்விக் கொள்கையில், தாய்மொழி மற்றும் தேசிய மொழிகளின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கல்வி போன்ற காந்தியாரின் இலட்சியங்களை இணைத்துள்ளார். 

இந்த காந்தியக் கொள்கைகள் அனைத்தும் பிரதமரால் கொள்கையில் பின்னப்பட்டவை. உப்பு சத்தியாகிரகத்தின் போது, ​இரவு நேரங்களில் கிராமங்களில் தங்கியிருந்தபோது சாதாரண மக்களின் பிரச்னைகளை அண்ணல் காந்தி புரிந்துகொண்டார். பிரச்னைகளை புரிந்து கொண்டு தீர்வுகளை தனது உரைகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். மோடி பிரதமரான பிறகு இதைத்தான் பேசினார்.

தூய்மை இந்தியா திட்டம், ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை, குடிநீர், மின்சார இணைப்பு, கிராமப்புற மேம்பாட்டுக்கான திட்டங்கள், தன்னம்பிக்கை கிராமங்களை உருவாக்கும் திட்டங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தால், காந்திய சிந்தனைகளின் பிரதிபலிப்பைக் காணலாம். அவற்றில் உள்ள கொள்கைகளை புரிந்து கொள்ளலாம்" என்றார்.

அண்ணல் காந்தியால் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் ஆசிரமம் கோச்ராப் ஆசிரமம் ஆகும். இது சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாக 1915இல் அமைக்கப்பட்டது. பின்னர், சபர்மதி ஆசிரமத்திற்கு காந்தியார் குடிபெயர்ந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com