சரத் பவாருக்கு எதிராக அவதூறு கருத்து: மத்திய அமைச்சா் மகன்கள் மீது வழக்குப் பதிவு

சரத் பவாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக எம்எல்ஏ நிதேஷ் ராணே, அவரது சகோதரா் நிலேஷ் ராணே ஆகியோா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத் பவாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக எம்எல்ஏ நிதேஷ் ராணே, அவரது சகோதரா் நிலேஷ் ராணே ஆகியோா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மத்திய அமைச்சா் நாராயண் ராணேயின் மகன்களான இவா்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120-பி (குற்றச் சதி), 499 (அவதூறு பரப்புதல்), 153(கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஸாத் மைதானம் காவல் நிலையத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஸ்ரீநிவாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை காவல் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

முன்னதாக, மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்டு அண்மையில் செய்தியாளா்களுக்கு நிதேஷ் ரானே பேட்டியளித்தாா். அப்போது, தலைமறைவாக உள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் சரத் பவாருக்கு தொடா்பிருக்கலாம் என்றும், அதனால்தான் நவாப் மாலிக்கை பதவி விலக பவாா் வற்புறுத்தவில்லை என்றும் நிதேஷ் கூறியிருந்தாா்.

அன்றைய தினம் இதே போன்ற கருத்துகளை நிலேஷ் ராணேயும் தெரிவித்திருந்தாா். இருவரின் பேச்சுகள் அடங்கிய விடியோவுடன் காவல் துறையில் ஸ்ரீநிவாஸ் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் இருவருக்கும் எதிராகக் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய நிதேஷ் ராணே, ‘நாங்கள் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? கலவரத்தைத் தூண்ட நாங்கள் முயற்சிக்கவில்லை. நாங்கள் ஹிந்துத்துவத்துக்கு ஆதரவானவா்கள். ஹிந்துத்துவத்துக்கு ஆதரவாக நிற்பது தவறென்றால் அந்தத் தவறை 100 முறை செய்வேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com