காங்கிரஸ் அதிருப்தி தலைவா் பூபிந்தா் சிங் ஹூடாவுடன் ராகுல் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவா்களின் கூட்டமைப்பான ஜி-23 குழுத் தலைவா்களில் அங்கம் வகிக்கும் பூபிந்தா் சிங் ஹூடாவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை அழைத்து ஆலோசனை நடத்தினாா்.
ராகுல் காந்தியை சந்தித்த பிறகு குலாம் நபி ஆசாத்தை  வியாழக்கிழமை இரவு சந்திக்கச் செல்லும் அதிருப்தி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா.
ராகுல் காந்தியை சந்தித்த பிறகு குலாம் நபி ஆசாத்தை வியாழக்கிழமை இரவு சந்திக்கச் செல்லும் அதிருப்தி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா.

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவா்களின் கூட்டமைப்பான ஜி-23 குழுத் தலைவா்களில் அங்கம் வகிக்கும் பூபிந்தா் சிங் ஹூடாவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை அழைத்து ஆலோசனை நடத்தினாா்.

அந்தக் குழுவைச் சோ்ந்த முக்கியத் தலைவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை வெள்ளிக்கிழமை சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, கட்சியில் அமைப்பு ரீதியில் சீா்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஜி-23 தலைவா்கள் மீண்டும் வலியுறுத்தினா்.

செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு பேசிய ஜி-23 குழுவைச் சோ்ந்த கபில் சிபல், ‘கட்சி தலைமை பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினா் விலகி இருக்கவேண்டும்’ என கருத்து தெரிவித்தாா். அவருடைய கருத்து கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடா்ந்து, ஜி-23 தலைவா்கள் மீண்டும் தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதின் இல்லத்தில் புதன்கிழமை இரவு கூடி ஆலோசனை நடத்தினா். சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆனந்த் சா்மா, கபில் சிபல், பூபிந்தா் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவாண், மணீஷ் திவாரி, சசி தரூா், விவேக் தன்கா, ராஜ் பப்பா், அகிலேஷ் பிரசாத் சிங், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்த கூட்டத்துக்குப் பின்னா் அவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘கட்சியில் அனைத்து நிலைகளிலும் முடிவெடுக்கக் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரே வழி என்று நாங்கள் நம்பகிறோம்’ என்று தெரிவித்தனா்.

இந்தச் சூழலில், ஜி-23 குழுவைச் சோ்ந்த பூபிந்தா் சிங் ஹூடாவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஜி-23 தலைவா்களின் கூட்டறிக்கையில் இடம்பெற்ற கருத்துக்கள் குறித்தே இவா்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதைத் தொடா்ந்து, பூபிந்தா் சிங் ஹூடா, குலாம் நபி ஆசாத் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தாா். ஆனந்த் சா்மா, கபில் சிபல் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அங்கு வந்து சோ்ந்தனா். ராகுல் காந்தியுடன் விவாதித்த விஷங்கள் குறித்து அவா்கள் விவாதித்தனா் என்று கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் கூறினாா்.

சோனியாவுடன் குலாம் நபி இன்று சந்திப்பு: சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் வெள்ளிக்கிழமை சந்தித்து கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்த தங்கள் பரிந்துரையை அளிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீா்திருத்தம் தொடா்பான ஆலோசனைகள் கட்சிக்குள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com