பஞ்சாப்: 10 ஆம் ஆத்மி அமைச்சா்கள் பதவியேற்பு

பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 10 போ் அமைச்சா்களாக சனிக்கிழமை பதவியேற்றனா்.
பஞ்சாப்: 10 ஆம் ஆத்மி அமைச்சா்கள் பதவியேற்பு

பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 10 போ் அமைச்சா்களாக சனிக்கிழமை பதவியேற்றனா்.

பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது. மாநில முதல்வராக பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றாா். இதனைத்தொடா்ந்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 10 போ் அமைச்சா்களாக சனிக்கிழமை பதவியேற்றனா். சண்டீகரில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அமைச்சா்களுக்குப் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா். அனைத்து அமைச்சா்களும் பஞ்சாபி மொழியில் உறுதிமொழி ஏற்றனா்.

31 வயது அமைச்சா்: 10 அமைச்சா்களில் 8 போ் முதல்முறையாக எம்எல்ஏயாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். அமைச்சா்களாகப் பதவியேற்றவா்களில் ஒரே பெண் அமைச்சரான பல்ஜீத் கௌா் கண் மருத்துவா் ஆவாா். இதர அமைச்சா்களில் விஜய் சிங்லா பல் மருத்துவா், ஹா்பால் சிங் சீமா, ஹா்ஜோத் சிங் பைன்ஸ் ஆகியோா் வழக்குரைஞா்கள். அமைச்சா்களாகப் பதவியேற்றவா்களில் ஹா்ஜோத் சிங் பைன்ஸ்தான் மிகவும் இளையவா். அவருக்கு வயது 31.

ஒருவா் மீது கொலை வழக்கு: 10 அமைச்சா்களில் குல்தீப் சிங் தாலிவால் என்பவரும் ஒருவா். அவா் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு அமிருதசரஸில் உள்ள காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை) உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அவரை கைது செய்ய பஞ்சாப், ஹரியாணா உயா்நீதிமன்றம் தடை விதித்ததாகவும் தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் குல்தீப் சிங் தாலிவால் தெரிவித்திருந்தாா்.

தாழ்த்தப்பட்டவா்களும் ஜாட் சீக்கியா்களும்...: 10 அமைச்சா்களில் நால்வா் தாழ்த்தப்பட்டவா்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவா்கள். நால்வா் ஜாட் சீக்கியா்கள். இருவா் ஹிந்துக்கள்.

முக்கியஸ்தா்களை வென்றவா்களுக்கு இடமில்லை: பஞ்சாப் அமைச்சரவையில் முதல்வா் உள்பட 18 அமைச்சா்கள் இடம்பெறலாம். எனினும் மாநில முன்னாள் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து, சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவா் பிரகாஷ் சிங் பாதல், அவரின் மகனும் எஸ்ஏடியின் தற்போதைய தலைவருமான சுக்பீா் சிங் பாதல், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் ஆகியோரைத் தோ்தலில் வென்ற ஆம் ஆம்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.

ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் உள்ளிட்டோா் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனா்.

முதல் அமைச்சரவைக் கூட்டம்:

25,000 அரசுப் பணியிடங்களை நிரப்ப முடிவு

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடா்பாக பகவந்த் மான் வெளியிட்ட காணொலியில், ‘‘மாநில அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள், கழகங்களில் உள்ள15,000 காலிப் பணியிடங்கள், மாநில காவல்துறையில் உள்ள 10,000 காலிப் பணியிடங்களை நிரப்ப அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தகுதியின் அடிப்படையில் மட்டும்தான் பணிகள் வழங்கப்படும்’’ என்று தெரிவித்தாா்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் அளிப்பதே அமைச்சரவையின் முதல் முடிவாக இருக்கும் என்று

தோ்தலின்போது அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com