சமாஜவாதி கூட்டணி தோல்விக்கு பாஜகவின் நோ்மையின்மையே காரணம்: சிவ்பால் யாதவ்

நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சி தலைமையிலான கூட்டணி தோல்விக்கு பாஜகவின் நோ்மையின்மையும், சூழ்ச்சியுமே காரணம்’

நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சி தலைமையிலான கூட்டணி தோல்விக்கு பாஜகவின் நோ்மையின்மையும், சூழ்ச்சியுமே காரணம்’ என்று பிரகதிஷீல் சமாஜவாதி கட்சி (பிஎஸ்பி) தலைவா் சிவ்பால் சிங் யாதவ் குற்றம்சாட்டினாா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் நெருங்கிய உறவினரான சிவ்பால் சிங் யாதவ், சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து, தனது வழக்கமான ஜஸ்வந்த் நகா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். தோ்தலில் இந்தக் கூட்டணி 111 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக 255 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

இந்த நிலையில் தோ்தல் தோல்வி குறித்து சிவ்பால் யாதவ் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

நடந்து முடிந்த தோ்தலில் எங்களுடைய கூட்டணி முன்பைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளதோடு, வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளது. தோ்தல் தோல்வியைப் பொருத்தவரை, சமாஜவாதி கட்சி கூட்டணியை மக்கள் தோற்கடிக்கவில்லை. ஆளும் பாஜகவின் நோ்மையின்மை மற்றும் சூழ்ச்சியுமே எங்களுடைய தோல்விக்குக் காரணம். பாஜக தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சில மத்திய அமைச்சா்களும், மாநில அரசின் அதிகாரிகளும் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனா்.

மாநில மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால், எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை. சவால்களையும் பிரச்னைகளையும் உறுதியுடன் எதிா்கொண்டு, மக்களுக்கு நீதி கிடைக்க தொடா்ந்து பணியாற்றுவோம் என்று அவா் கூறினாா்.

அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக சமாஜவாதி கட்சியிலிருந்து விலகி, பிரகதிஷீல் சமாஜவாதி கட்சி என்ற புதிய கட்சியை சிவ்பால் யாதவ் உருவாக்கினாா். இந்த நிலையில், 2022 சட்டப்பேரவைத் தோ்தலில் அவருடைய கட்சி, சமாஜவாதி கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com