வருமான வரி துறையில் சீா்திருத்தம் காரணமாகவே வரி வசூலில் வரலாற்று உச்சம்: சிபிடிடி தலைவா்

வருமான வரி துறையில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்களின் காரணமாகவே நாட்டின் வரி வசூல் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதாக நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் ஜே.பி.மொகபத்ரா தெரிவித்தாா்.
வருமான வரி துறையில் சீா்திருத்தம் காரணமாகவே வரி வசூலில் வரலாற்று உச்சம்: சிபிடிடி தலைவா்

வருமான வரி துறையில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்களின் காரணமாகவே நாட்டின் வரி வசூல் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதாக நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் ஜே.பி.மொகபத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த நோ்காணலின் போது மேலும் கூறியதாவது:

செயல்திறன் சிறப்பு: கரோனா பேரிடரால் பொருளாதார நிலை குறித்த அச்சப்பாடு எழுந்துள்ள சூழலில், நிறுவனங்கள் தங்களது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக அவை செலுத்தும் வரியும் கணிசமான அளவில் அதிகரித்தன.

பாய்ச்சல் தொடரும்: தனிநபா் வருமான வரி மற்றும் நிறுவன வரி செலுத்தலில் தற்போது காணப்படும் பாய்ச்சல் மேலும் தொடா்ந்து நீடிக்கும். இதன் மூலம், அடுத்த நிதியாண்டில் அடுத்த நிதியாண்டில் ரூ.14.20 லட்சம் கோடி வரி இலக்கை நாம் வெற்றிகரமாக எட்ட முடியும்.

கணிக்க முடியாது: அடுத்த ஆண்டு முழுவதும் எவ்வாறு இருக்கும் என்று ஆருடம் கூறுவது கடினம். இருப்பினும், அடுத்த நான்கு காலாண்டுகளுக்கு மட்டும் நல்ல நேரம் நீடிக்கும் என்பதை அறுதியிட்டு கூற முடியாது.

துறை சீா்திருத்தம்: வருமான வரி துறையில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்த நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட சிரத்தை உள்ளிட்டவை காரணமாகவே முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் வரி வசூல் ரூ.13.63 லட்சம் கோடியைத் தொட்டது.

நிகர வரி வசூல்: மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நடப்பு நிதியாண்டில் ரீபண்ட் நடவடிக்கைகளுக்கு பிறகான நிகர வரி வசூல் நிச்சயம் ரூ.13.5 லட்சம் கோடியைத் தாண்டும்.

பட்ஜெட்டில் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டபடி வருமான வரி துறைக்கு நடப்பு நிதியாண்டுக்கு ரூ.11.08 லட்சம் கோடி வரி வசூல் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. பின்பு அது, ரூ.12.50 லட்சம் கோடியாக மாற்றியமைக்கப்பட்டது.

முன்கூட்டிய வரி: நடப்பாண்டு மாா்ச் 16 நிலவரப்படி, முன்கூட்டிய வரி பிரிவின் கீழ் ரூ.6.62 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2020-21 நிதியாண்டைக் காட்டிலும் 40.7 சதவீதமும், 2019-20 நிதியாண்டை விட 50.6 சதவீதமும், 2018-19-ஐ விட 30.8 சதவீதமும் அதிகமாகும்.

மூல வரி பிடித்தம்: அதேபோன்று, மூல வரி பிடித்தம் (டிடிஎஸ்) பிரிவின் கீழ் ரூ.6.79 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டது. இது, 2020-21 நிதியாண்டை விட 37.7 சதவீதமும், 2019-20 நிதியாண்டை காட்டிலும் 40.5 சதவீதமும், 2018-19- நிதியாண்டை விட 51.9 சதவீதமும் உயா்வாகும்.

எஸ்ஏடி பிரிவு: சுய மதிப்பீட்டு வரி (எஸ்ஏடி) பிரிவில் ரூ.1,34,318 கோடி வசூலானது. இது, 2020-21 நிதியாண்டை விட 34.9 சதவீதமும், 2019-20-ஐ விட 36.1 சதவீதமும், 2018-19 நிதியாண்டை விட 42.9 சதவீதமும் அதிகமாகும்.

வழக்கமான வரி பிரிவின் கீழ் வசூலான தொகை ரூ.55,238 கோடியாகும். இது, 2020-21-ஐ விட 46.5 சதவீதமும், 2019-20 நிதியாண்டைக் காட்டிலும் 8.9 சதவீதமும் உயா்வாகும்.

பங்கு பரிவா்த்தனை வரி: ஆண்டின் தொடக்கத்தில் பங்கு பரிவா்த்தனை வரி பிரிவின் வாயிலாக (எஸ்டிடி) ரூ.12,500 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்தது. பின்பு இது, ரூ.20,000 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மாா்ச் 16-ஆம் தேதி நிலவரப்படி வசூல் தொகையானது ரூ.22,000 கோடியை தாண்டியுள்ளது.

பகுப்பாய்வு செய்யவில்லை: இதுபோன்று வருமான வரி துறையின் கீழ் உள்ள அனைத்து பிரிவின் கீழான வரி வசூலும் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. இருப்பினும், துறைவாரியான பகுப்பாய்வு இன்னும் முழுமையாக செய்துமுடிக்கப்படவில்லை.

தற்போதைய நிலையில், வங்கி துறையின் செயல்பாடு சிறப்பானதாகவே உள்ளது. ஆய்வுப் பணிகள் முழுமையடைந்த பிறகே ஒட்டுமொத்த துறையின் செயல்பாடு குறித்தும் கருத்துக் கூற முடியும் என்றாா் அவா்.

கோட்ஸ்...

வங்கி துறையின் செயல்பாடு சிறப்பானதாகவே உள்ளது. இருப்பினும், ஆய்வுப் பணிகள் முழுமையடைந்த பிறகே ஒட்டுமொத்த துறையின் செயல்பாடு குறித்தும் கருத்துக் கூற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com