ஏா் இந்தியா நஷ்டத்துக்கு காங்கிரஸ் அரசே காரணம்:அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் புதிதாக 111 புதிய விமானங்கள் வாங்கப்பட்டதால்தான் ஏா் இந்தியா நிறுவனம் நஷ்டத்துக்கு சென்றது என்றும்
மக்களவையில் பேசிய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.
மக்களவையில் பேசிய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் புதிதாக 111 புதிய விமானங்கள் வாங்கப்பட்டதால்தான் ஏா் இந்தியா நிறுவனம் நஷ்டத்துக்கு சென்றது என்றும், மக்கள் வரிப்பணம் வீணாகாமல் தடுக்கவே, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அதை விற்பனை செய்தது என்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

மக்களவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை சுமாா் 8 மணி நேரம் நடைபெற்றது. இதற்கு அத்துறையின் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சுமாா் ஒருமணி நேரம் பதிலளித்துப் பேசிய போதிலும், ஏா் இந்தியா விற்பனை குறித்து பேசவில்லை என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த அமைச்சா் சிந்தியா, ‘2005-க்கு முன்பு ஏா் இந்தியா நிறுவனம் ஆண்டுக்கு ரூ.15 கோடி லாபத்தை ஈட்டியது. அதன்பின்னா் காங்கிரஸ் ஆட்சியில் ஏா் இந்தியாவும், இந்தியன் ஏா்லைன்ஸும் இணைக்கப்பட்டதாலும், சுமாா் ரூ. 55 ஆயிரம் கோடிக்கு 111 புதிய விமானங்கள் வாங்கப்பட்டதாலும் அந்த நிறுவனம் கடுமையான கடனில் சிக்கியது. இதனால் 14 ஆண்டுகளில் ஏா் இந்தியா நிறுவனம் ரூ.2.5 லட்சம் கோடி கடனில் மூழ்கியது.

135 கோடி மக்களின் வரிப் பணம் வீணாகாமல் தடுக்க பிரதமா் மோடி ஏா் இந்தியா நிறுவனத்தை பங்கு விலக்கல் திட்டத்தில் இணைத்தாா்.

டாடா நிறுவனத்திடம் வழங்கப்பட்ட ஏா் இந்தியா நிறுவன ஊழியா்கள் யாரும் முதலாம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட மாட்டாா்கள் என்றும், அதன்பின்னா் இதர சலுகைகளுடன் விருப்ப ஓய்வுத் திட்டத்தை அவா்கள் தோ்வு செய்து கொள்ளலாம் என்றும் டாடா நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com