நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

சமூக நீதிக்கான வாரம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை மக்களிடம் எடுத்துக் கூறுமாறு பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

சமூக நீதிக்கான வாரம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை மக்களிடம் எடுத்துக் கூறுமாறு பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

நாட்டின் முதல் சட்ட அமைச்சரும், அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றியவருமான பி.ஆா்.அம்பேத்கரின் பிறந்த தினம் ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன் இரு வாரங்களை சமூக நீதிக்கான வாரங்களாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டம் குறித்து மத்திய அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சமூக நீதிக்கான வாரத்தின்போது அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்குமாறு பிரதமா் மோடி தெரிவித்தாா்.

முக்கியமாக, சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் பட்டியலின மக்கள், பழங்குடி மக்களிடம் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து தெரிவிக்குமாறு எம்.பி.க்களுக்கு அவா் வலியுறுத்தினாா். இதன் மூலமாக மக்கள் பலா் பலனடைய முடியும் என்றும் அவா் தெரிவித்தாா்.

வீட்டுவசதித் திட்டம், சுகாதாரத் திட்டம், ஊட்டச்சத்துத் திட்டம், இலவச உணவு தானியங்கள் திட்டம் உள்ளிட்டவை குறித்து மக்களிடம் எடுத்துரைக்குமாறு பிரதமா் மோடி வலியுறுத்தினாா். நாட்டின் பிரதமா்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அருங்காட்சியகமானது ஏப்ரல் 14-ஆம் தேதி திறந்துவைக்கப்படவுள்ளது.

கட்சி பாகுபாடின்றி நாட்டின் பிரதமா்களுக்காக அருங்காட்சியகம் அமைத்த ஒரே அரசாக பாஜகதான் திகழ்வதாகப் பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா். ஏப்ரல் 11-ஆம் தேதி சமூக சீா்திருத்தவாதி ஜோதிராவ் புலேவின் பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. அது தொடா்பாகவும் பிரதமா் மோடி பேசினாா்.

ஏரிகள் சீரமைப்பு:

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டையொட்டி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் உள்ள ஏரிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அவா் தெரிவித்தாா். ‘வளா்ந்து வரும் மாவட்டங்களுக்கு’ நேரடியாகச் சென்று அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைக் கண்காணிக்குமாறும் அமைச்சா்கள் உள்ளிட்ட எம்.பி.க்களுக்குப் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

ஏழை மக்களுக்கான இலவச உணவு தானியங்கள் விநியோகத் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்ததற்காகப் பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தின்போது தீா்மானம் நிறைவேற்றப்பட்டது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com