தில்லி முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் பாஜகவினர் தாக்குதல்

"தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலைக் கண்டித்து புதன்கிழமை போராட்டம் நடத்திய பாஜக இளைஞர் பிரிவினர்,
 தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டின் உள்ளே நுழையும் நபர்கள். (சிசிடிவி பதிவு)
 தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டின் உள்ளே நுழையும் நபர்கள். (சிசிடிவி பதிவு)

"தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலைக் கண்டித்து புதன்கிழமை போராட்டம் நடத்திய பாஜக இளைஞர் பிரிவினர், அவரது இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்தன.
 இந்த சம்பவம் குறித்து தில்லி போலீஸார் அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 இந்த சம்பவம் குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், "தில்லி முதல்வர் கேஜரிவால் இல்லத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர் தடுப்பு வேலிகளைத் தாண்டி முதல்வர் இல்லத்தின் நுழைவாயிலில் வர்ணத்தை பூசிவிட்டு சிசிடிவி கேமராக்கள் மற்றும் தானியங்கி தடுப்புக் கம்பியை சேதப்படுத்தினர். அவர்களை போலீஸார் உடனடியாக அப்புறப்படுத்தி சுமார் 70 பேரை தடுப்புக் காவலில் வைத்தனர். சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
 இந்தப் போராட்டம் குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறுகையில், "பஞ்சாப் தேர்தலில் அரவிந்த் கேஜரிவாலை தோற்கடிக்க முடியவில்லை.
 இதனால், பாஜக தற்போது அவரைக் கொலை செய்ய நினைக்கிறது. காவல் துறை உதவியுடன் பாஜக, கேஜரிவாலைக் கொல்ல விரும்புவதையே இது காட்டுவதாக உள்ளது' என்றார்.
 பாஜக மறுப்பு: இதுகுறித்து பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா கூறுகையில், "கேஜரிவாலின் இல்லத்தின் அருகே எங்கள்அமைப்பின் தலைவர்களும், தொண்டர்களும் போராட்டம் நடத்தினர். ஆனால், நாசவேலையில் ஏதும் ஈடுபடவில்லை. பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்பட 25 பேர் தடுப்புக் காவலில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்' என்றார்.
 "தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் தொடர்பாக பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன.
 இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் சட்டப்பேரவையில் கேஜரிவால், பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் தாக்கிப் பேசினார்.
 இதைத் தொடர்ந்து, பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கேஜரிவாலை தாக்கிப் பேசினர். முதல்வர் கேஜரிவால், காஷ்மீரி பண்டிட்டுகளின் வலியை "கேலி' செய்வதாகவும், காஷ்மீரில் அவர்களின் "இனப் படுகொலை' சம்பந்தப்பட்ட திரைப்படத்தை "பொய்' என்று கூறுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com