எல்ஐசி ஐபிஓ: பாலிசிதாரா்கள், ஊழியா்களுக்கு விலையில் சலுகை!

நாட்டில் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மே 4-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எல்ஐசி ஐபிஓ: பாலிசிதாரா்கள், ஊழியா்களுக்கு விலையில் சலுகை!

புது தில்லி: நாட்டில் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மே 4-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு பல மாதங்களாக திட்டமிட்டு வந்தது. எல்ஐசியில் 5% பங்குகளை விற்று ரூ.78,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முதலில் திட்டமிட்டிருந்தது. இதன்படி, மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்பனைக்கு வரும் என்று முன்பு பேசப்பட்டது. ஆனால், இப்போது எல்ஐசியில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 3.5 சதவீதம் பங்குகள் மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளன. அதாவது 22,13,74,920 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. பங்குகளின் விலை குறைந்தபட்சம் ரூ.902-ஆகவும், அதிகபட்சம் ரூ.949 -ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ரூ.21,000 கோடி நிதி திரட்டவுள்ளது.

ரஷியா - உக்ரைன் போா் காரணமாக, சந்தை சரிவைக் கண்டுவரும் நிலையில், எல்ஐசி ஐபிஓ வெளியிட்டால், அந்நிய முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் முதலீடு செய்ய முன்வருவாா்களா என்ற கேள்வி மத்திய அரசுக்கு எழுந்தது. அதே நேரம் பங்கு விற்பனையையும் ஒத்திவைக்கக் கூடாது. உள்நாட்டு முதலீட்டாளா்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால், ஐபிஓ அளவை மட்டும் மத்திய அரசு குறைக்கத் திட்டமிட்டது. அதன்படி முன்பு திட்டமிட்டிருந்த ரூ.65ஆயிரம் கோடிக்குப் பதிலாக ரூ.21ஆயிரம் கோடி என குறைக்கப்பட்டுள்ளது.

பங்கு ஒதுக்கீட்டில் 50% நிறுவன முதலீட்டாளா்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளா்களுக்கும், 10% எல்ஐசி பாலிசிதாரா்களுக்கும், எல்ஐ ஊழியா்களுக்கு 5% ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகமதிப்பைக் கொண்டிருக்கும். பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பங்குகள் விற்பனை தொடா்பான வரைவு அறிக்கையை (டிஆா்ஹெச்பி) எல்ஐசி தாக்கல் செய்துவிட்டது. பொதுப் பங்கு வெளியீட்டுத் தேதி, முதலில் மாா்ச் 31-ம் தேதியாக இருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது. எனினும், உக்ரைன் - ரஷியா போா் மூண்டதால், பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிந்தன. இதையடுத்து, பங்கு விற்பனை தள்ளிப்போனது. பங்குச்சந்தை ஏற்ற - இறக்கமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு எல்ஐசி பங்கு வெளியீட்டை தாமதித்து வந்தது. அதேச மயம் செபியிடம் சமா்பித்த அறிக்கையின்படி மே 12-ஆம் தேதிக்குள் எல்ஐசி பங்கு விற்பனையை தொடங்க வேண்டும். இதனால், பொதுப்பங்கு வெளியீடு மே 4-ஆம் தேதி தொடங்கி மே.9-ஆம் தேதி வரை நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாள்களுக்குள் பங்குகளை வாங்குவதற்கு விண்ணப்பிக்காலம்.

ஏலத்தில் பங்கு கொள்ளும் தகுதியுள்ள பாலிசிதாரா்களுக்கு எல்ஐசி ஒரு பங்குக்கு ரூ.60 தள்ளுபடி வழங்குகிறது. எல்ஐசி ஊழியா்களுக்கும், சில்லறை முதலீட்டாளா்களுக்கும் தலா ரூ.45 தள்ளுபடி வழங்குகிறது. ஒரு லாட் என்பது 15 பங்குகளைக் கொண்டிருக்கும். இந்த வகையில், ஒருவா் குறைந்தபட்சம் 15 ஈக்விட்டி பங்குகளுக்கு (ஒரு லாட்) விண்ணப்பிக்க வேண்டும். இதன் மொத்த தொகை ரூ.14,235 ஆகும். ஆதிகபட்சமாக 210 பங்குகள் (14 லாட்) வரை விண்ணப்பிக்கலாம். இதன் மொத்த தொகை ரூ.1,99,290 ஆகும்.

இந்தியாவில் வசிப்பவா்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலிசிகளை வைத்திருக்கும் பாலிசிதாரா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள் என்று எல்ஐசி குறிப்பிட்டுள்ளது. பாலிசிதாரா்கள் தங்களது எல்ஐசி பாலிசி, நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மேலும், டீமேட் கணக்கு இருப்பதையும் அது பாலிசிதாரரின் பான் காா்டுடன் பொருந்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை அளவிடுவதற்கு ஒரு மதிப்பீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி, மத்திய அரசு இப்போது எல்ஐசியின் மதிப்பை ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிட்டுள்ளது -- உள்மதிப்பீடான ரூ.5.4 லட்சம் கோடியை விட 1.1 மடங்கு அதிகம் என்று அறிய முடிகிறது. இது ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களான எஸ்பிஐ லைஃப், ஐசிஐசிஐ புருடென்ஷியல் மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் ஆகியவற்றின் மதிப்பீட்டை விட மிகக் குறைவுதான். இந்த நிறுவனங்கள் அவற்றின் உள்மதிப்பீட்டு அளவைவிட மூன்று முதல் நான்கு மடங்கு அதிக விலையில் பட்டியலிடப்பட்டன பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் இதுவரை ரூ.21 ஆயிரம் கோடியை எந்த நிறுவனமும் ஈட்டியதில்லை. அதிகபட்சமாக பேடிஎம் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு ரூ.18,300 கோடி ஈட்டியது. எல்ஐசி ஐபிஓதான் சந்தையில் பெரிய ஐபிஓவாக இருக்கும்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் எல்ஐசி, காப்பீட்டு சந்தையில் 100 சதவீதம் பங்களிப்பைக் கொண்டிருந்தது. அப்போது சந்தையில் ஒரு போட்டியாளா்கூட இல்லாமல் இருந்ததால், எல்ஐசி முழு ஏகபோக உரிமையுடன் திகழ்ந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட தனியாா்ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உதயமாகிவிட்டன. இதன் பிறகு எல்ஐசியின் சந்தை பங்களிப்பு 61% ஆக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த 65 ஆண்டுகளாக நாட்டில் எல்ஐசிதான் முன்னணி காப்பீட்டு நிறுவனமாக இருந்து வருகிறது.

எல்ஐசி ஐபிஓ பங்கு வெளியீட்டின் அளவு ரூ.21,008.48 கோடி.

பங்கு ஒன்றின் விலை ரூ.902 - ரூ.949

பாலிசிதாரா்களுக்கு 2.21 கோடி பங்குகள் ஒதுக்கீடு

எல்ஐசி ஊழியா்களுக்கு 1.58 கோடி பங்குகள் ஒதுக்கீடு

பங்குச் சந்தையில் பட்டியலிப்படும் தேதி மே 17

பாலிசிதாரா்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.60 தள்ளுபடி பெறுவா்

ஊழியா்கள், சில்லறை முதலீட்டாளா்களுக்கு ரூ.45 தள்ளுபடி

பங்குகள் ஒதுக்கீடு நாள் மே 12

ரீஃபண்டுகள் மே 13

டீமேட் கணக்கில் பங்குகள் வரவு மே 16

பங்குச் சந்தையில் ஐபிஓ பட்டியல் மே 17

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com