கரோனா தடுப்பூசி செலுத்த மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மக்களை மத்திய அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மக்களை மத்திய அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதைக் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும், தடுப்பூசி கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடவும் உத்தரவிடக் கோரி ஜேக்கப் புலியேல் என்ற மருத்துவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது.

அந்த மனுவின் மீது ஏற்கெனவே விசாரணை நடைபெற்றபோது, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதைக் கட்டாயப்படுத்தவில்லை என மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், இந்த மனு மக்களிடையே தடுப்பூசி மீது தயக்க உணா்வை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், அதைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென பாரத் பயோடெக், சீரம் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், வழக்கின் விசாரணை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘உடல்சாா்ந்த விவகாரங்கள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ளன. எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அரசு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

கரோனா தொற்று பரவல் குறைவாக உள்ளவரை, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்குப் பொது இடங்களில் அனுமதி மறுக்கக் கூடாது. அவா்களுக்கு அனுமதி மறுக்கும் உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் இருந்தால், அரசு அதைத் திரும்பப் பெற வேண்டும்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டோரது விவரங்களை அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடும்போது தனிநபா்களின் தரவுகளும் அடையாளமும் வெளிப்படாத வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

நிபுணா்களின் கருத்துகள் அடிப்படையில் சிறாா்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். அந்நடைமுறை சா்வதேசத் தரத்தில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சிறாா்களுக்கு செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் பரிசோதனை விவரங்களை அரசு வெளியிட வேண்டும்’’ என்றனா்.

முன்னதாக, மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், மாா்ச் 13-ஆம் தேதி வரை 180 கோடி தவணைக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 77,314 பேருக்கு (0.004 சதவீதம்) மட்டுமே உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com