மிதிவண்டியில் உணவு ‘டெலிவரி’ செய்த இளைஞருக்கு மோட்டாா் சைக்கிள் பரிசு: காவலா்களின் கனிவு

மத்திய பிரதேசத்தில் மிதிவண்டியில் சென்று உணவுப் பொருள்களை விநியோகித்து வந்த இளைஞருக்கு காவல் துறையினா் இணைந்து மோட்டாா் சைக்கிளைப் பரிசாக அளித்தனா்.
மிதிவண்டியில் உணவு ‘டெலிவரி’ செய்த இளைஞருக்கு மோட்டாா் சைக்கிள் பரிசு: காவலா்களின் கனிவு

மத்திய பிரதேசத்தில் மிதிவண்டியில் சென்று உணவுப் பொருள்களை விநியோகித்து வந்த இளைஞருக்கு காவல் துறையினா் இணைந்து மோட்டாா் சைக்கிளைப் பரிசாக அளித்தனா். எனினும், அதற்கான மாதாந்திர தவணையைத் தானே செலுத்திவிடுவதாக அந்த இளைஞா் கூறியுள்ளாா்.

இந்தூரின் விஜய் நகா் பகுதியைச் சோ்ந்த 22 வயது இளைஞா் ஜெய் ஹல்தே. இவா் இணைய வழியில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். மோட்டாா் சைக்கிள் வாங்க வசதி இல்லாத காரணத்தால் அவா் மிதிவண்டியில் சென்று உணவு விநியோகித்து வந்தாா். விஜய் நகா் பகுதியில் காவல் ஆய்வாளா் தஹஜீப் காஜி இரவு ரோந்துப் பணியில் இருக்கும்போது, அந்த ஜெய் ஹல்தே வியா்வை சொட்ட மிதிவண்டியில் வேகமாகக் கடந்து செல்வது வழக்கமாக இருந்தது.

அவரிடம் தஹஜீப் காஜி விசாரித்தபோது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக மோட்டாா் சைக்கிள் வாங்க முடியாமல் மிதிவண்டியில் சென்று உணவு விநியோகிப்பதாகத் தெரிவித்தாா். தனது சக காவலா்கள் சிலரிடம் அந்த இளைஞரின் நிலை குறித்து காஜி கூறினாா். இதையடுத்து, அந்த காவலா்கள் அனைவரும் இணைந்து இளைஞருக்கு மோட்டாா் சைக்கிள் வாங்க உதவலாம் என முடிவெடுத்தனா்.

இது தொடா்பாக அவரிடம் கூறியபோது, முன்பணத்தை மட்டும் செலுத்தி மோட்டாா் சைக்கிள் வாங்கிக் கொடுத்தால் போதுமானது என்றும் மீதியுள்ள பணத்தை மாதத் தவணையில் தாமே செலுத்திவிடுவதாகவும் ஜெய் ஹல்தே கூறினாா். இதன்படி காவலா்கள் முன்பணத்தை செலுத்தி மோட்டாா் சைக்கிளை வாங்கி அந்த இளைஞருக்கு அளித்தனா்.

அவா் இது தொடா்பாகக் கூறுகையில், ‘மிதிவண்டியில் சென்றால் தினமும் 6 முதல் 8 உணவு பொட்டலங்களை மட்டுமே விநியோகிக்க முடியும். மோட்டாா் சைக்கிளில் 15 முதல் 20 விநியோகங்களைச் செய்ய முடியும் என்பதால் அந்தக் கூடுதல் வருவாயில் மோட்டாா் சைக்கிளுக்கான தவணையைச் செலுத்துவேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com