ஜோத்பூர் கலவரம்: இதுவரை 97 பேர் கைது 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 
ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை மோதல் வெடித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை மோதல் வெடித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

ஜோத்பூர்:  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் ஜலோரி கேட் சந்திப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பால்முகிந்த் பிஸ்லாவின் சிலை அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நள்ளிரவு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு ஏற்கனவே கட்டப்பட்டிருந்த காவிக் கொடி அகற்றப்பட்டதாக சிலர் ஆட்சேபம் தெரிவித்ததில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் கலவரமாக மாறியது.

இதில், இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்கைளை வீசி தாக்கியதில் மோதலை தடுக்க முயன்ற காவல் துறை ஆணையர் உள்பட 4 காவலர்கள் காயமடைந்தனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 16 பேர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ராஜஸ்தான் ஆயுதப் படையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தை கலைத்தனர். மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடிய இரு தரப்பினர் கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டனர். போலீசார் வேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வதந்திகளை தடுக்கும் விதமாக இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். "மாவட்டத்தில் இன்று புதன்கிழமை நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது." 

இந்நிலையில், ஜோத்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 97 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஹவா சிங் குமாரியா தெரிவித்துள்ளார். 

மேலும்  ஜோத்பூர் பகுதி முழுவதும் உயர்மட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு சிறிய சம்பவமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். 

இதற்கிடையில், ஜோத்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணையைத் தொடங்குமாறும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதை உறுதி செய்ய அரசுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஜோத்பூர் கலவரம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் இந்த விஷயத்தில் தானாக முன்வந்து, மாநில அரசுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆளுநர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜோத்பூர் தொகுதி எம்பியும், மத்திய நீர்வளத்துறை  அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கலவரம் தொடர்பாக சரியான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் பகுதியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com