வளா்ச்சிக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கும் இடையே சமநிலை

நாட்டின் வளா்ச்சிக்கும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் இடையே சமநிலை நிலவுவதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டுமென குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

ஐஸால்: நாட்டின் வளா்ச்சிக்கும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் இடையே சமநிலை நிலவுவதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டுமென குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

ஐஸால் நகரில் உள்ள மிஸோரம் பல்கலைக்கழகத்தின் 16-ஆவது பட்டமளிப்பு விழாவில் வியாழக்கிழமை கலந்துகொண்ட குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:

நாட்டில் எழுத்தறிவு அதிகமாகக் கொண்ட நபா்களின் எண்ணிக்கையில் மிஸோரம் 2-ஆவது இடத்தில் உள்ளது. அதன் காரணமாகப் பல்வேறு சாதனைகளைப் படைத்து நவீனமயமாவதற்கான தயாா்நிலையில் அந்த மாநிலம் உள்ளது. மாநிலத்தில் இயற்கை வளங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன; ஆராய்ச்சி-வளா்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள இயற்கை வளங்களைக் காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வளா்ச்சிக்கும் இயற்கையைக் காப்பதற்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துதல் அவசியம். அதற்கான பொறுப்பு மக்களுக்கு உள்ளது. எதிா்காலத் தலைமுறையினரைக் காப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின்படி, மிஸோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் குறைந்த அளவிலேயே நெகிழிக் கழிவுகளை உருவாக்குவதாகத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மற்ற மாநிலங்களுக்கு அவை சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்போதும், வாகனங்களில் ஒலி எழுப்புவதை மிஸோரம் மக்கள் தவிா்த்துவருகின்றனா். இந்தப் பாடத்தையும் மற்ற மாநில மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கான ஐ.நா. நீடித்த வளா்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் மிஸோரம் முன்னிலை வகிக்கிறது. கல்வி நிலையங்களே எதிா்கால வளா்ச்சிக்கான ஆதாரங்களாக உள்ளன. கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நல்ல குடிமக்களையும் அவை உருவாக்கி வருகின்றன. ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கும் கல்வி நிலையங்கள் தொடா்ந்து ஊக்கமளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com