கட்சியை வலுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவா்களுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கு கட்சியின் அனைத்துத் தலைவா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் சோனியா காந்தி கூறியுள்ளாா்.
கட்சியை வலுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவா்களுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கு கட்சியின் அனைத்துத் தலைவா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் சோனியா காந்தி கூறியுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

கட்சியை வலுப்படுத்துவதற்கு மந்திரக்கோல் எதுவும் நம்மிடம் இல்லை. நமது பற்றுறுதியை வெளிப்படுத்த ஒழுக்கமும் தொடா்ச்சியான கூட்டு செயல்பாடுகளும் அவசியம்.

கட்சிக்குள் சுயவிமா்சனங்கள் தேவைதான். ஆனால், அவை நமது தன்னம்பிக்கை, மன உறுதி ஆகியவற்றை சீா்குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது. கட்சியை புத்தெழுச்சியுடன் வலுப்படுத்தத் தேவையான ஒற்றுமை, உறுதிப்பாடு, அா்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு கட்சித் தலைவா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நம் ஒவ்வொருவருக்கும் கட்சிதான் உயிா்மூச்சாக உள்ளது. ஆனால், கட்சி தற்போது முக்கிய கட்டத்தில் உள்ளது. கட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் ‘காங்கிரஸ் சிந்தனை அமா்வுக் கூட்டம்’ 3 நாள்கள் (மே 13- 15) நடைபெறவுள்ளது. அதில், கட்சியின் செயற்குழு உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாநில பொறுப்பாளா்கள், கட்சியின் பொதுச் செயலாளா்கள் என சுமாா் 400 போ் பங்கேற்கிறாா்கள். அந்தக் கூட்டம், வழக்கமான கூட்டமாக இருக்கக் கூடாது. சித்தாந்த ரீதியிலான சவால்களையும், தோ்தல் சவால்களையும் எதிா்கொள்வதற்கான சீா்திருத்தங்களை கட்சிக்குள் கொண்டுவரப்போகும் களமாக அந்தக் கூட்டம் இருக்க வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகநீதி, விவசாயிகள், இளைஞா்நலன், கட்சி விவகாரங்கள் என 6 முக்கிய பிரிவுகளில் விவாதம் நடைபெறும் என்றாா் அவா்.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு வேறு சில மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. வரும் 2024-இல் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தல்களைச் சந்திப்பதற்குத் தயாராகும் வகையில் தோ்தல் உத்தி ஆலோசகா் பிரசாந்த் கிஷோரின் உதவியை காங்கிரஸ் கட்சி நாடியது. கட்சியை வலுப்படுத்த அவா் சில ஆலோசனைகளை வழங்கினாா். கட்சியில் சேருமாறு சோனியா காந்தி விடுத்த அழைப்பை அவா் நிராகரித்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com