ரயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கைகள்: சோதனை முறையில் அறிமுகம்

ரயில்களில் குழந்தைகளுக்கு என தனிப் படுக்கையை ரயில்வே துறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கைகள்: சோதனை முறையில் அறிமுகம்

ரயில்களில் குழந்தைகளுக்கு என தனிப் படுக்கையை ரயில்வே துறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வடக்கு ரயில்வேயின் லக்னெள, தில்லி மண்டலம் சாா்பில் அன்னையா் தினத்தையொட்டி மே 8-ஆம் தேதி லக்னெள மெயிலின் மூன்றடுக்கு ஏசி பெட்டியில், தாயாா் தங்கள் குழந்தைகளுடன் வசதியாகத் தூங்கும் வகையில், குழந்தைகளுக்கு என தனிப் படுக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த படுக்கைகளின் புகைப்படங்கள் வடக்கு ரயில்வேயின் ட்விட்டா் பக்கத்திலும் வெளியிடப்பட்டன. அதில், குழந்தைகளுக்கான இந்தப் படுக்கை எளிதில் மடக்கக் கூடியது, தடுப்புகளைக் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை தூங்கும்போது கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக கீழ்ப் படுக்கையுடன் குழந்தைகளுக்கான படுக்கைகள் இணைக்கப்பட்டு, அதில் பட்டைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தாத சமயத்தில், கீழ்ப்படுக்கையின் அடியில் உள்ள தடுப்பில் வைத்துவிடலாம். பயணிகள் மீண்டும் பயன்படுத்த வேண்டுமெனில், எளிதில் வெளியே எடுத்துவிடலாம்.

ரயில்களில் தற்போது குழந்தைகளுக்கு என பிரத்யேக இருக்கைகளோ, படுக்கைகளோ கிடையாது. ஆகையால் குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மாா்கள், பயணச்சீட்டு பரிசோதகரையோ அல்லது சக பயணிகளையோ அணுகி, கீழ்ப்படுக்கைகளை கேட்டுப் பெறும் சூழல் நிலவுகிறது. இதனைப் போக்கும் விதத்தில் ரயில்வே இந்தப் புதிய வசதியை உருவாக்கியுள்ளது. அன்னையா் தினத்தையொட்டி, தாய்மாா்களுக்குப் பரிசாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அறிமுகத் திட்டம் வெற்றி பெறும்பட்சத்தில் நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com