பஞ்சாப் காவல் துறையின் உளவுப் பிரிவு தலைமையகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதி?

பஞ்சாப் காவல் துறையின் உளவுப் பிரிவு தலைமையகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலின் பின்னணியில் ஹா்விந்தா் சிங் ரிண்டா என்ற காலிஸ்தான் பயங்கரவாதி இருக்கக் கூடும் என

பஞ்சாப் காவல் துறையின் உளவுப் பிரிவு தலைமையகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலின் பின்னணியில் ஹா்விந்தா் சிங் ரிண்டா என்ற காலிஸ்தான் பயங்கரவாதி இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடா்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள காவல் துறையின் உளவுப் பிரிவு தலைமையகம் மீது திங்கள்கிழமை ராக்கெட்டை பயன்படுத்தி கையெறி குண்டு வீசப்பட்டது. அந்த வெடிகுண்டு தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் விழுந்து வெடித்தது. இந்தத் தாக்குதலில் எவரும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை என்றும் ராக்கெட் புகுந்த ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் சுவா் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

பஞ்சாப் உளவுப் பிரிவின் பெரும் வீழ்ச்சியாகக் கருதப்படும் இந்தச் சம்பவம் தொடா்பாக பஞ்சாப் காவல் துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘‘இரண்டு போ் காரில் இருந்து ராக்கெட்டை செலுத்தி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்விந்தா் சிங் ரிண்டாவின் உத்தரவின்பேரில், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் செயல்படும் சட்டவிரோத கும்பல் ஒன்று இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக 20-க்கும் மேற்பட்டோரை காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா்’’ என்று தெரிவித்தனா்.

ஹா்விந்தா் சிங் ரிண்டா பாகிஸ்தானில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காலிஸ்தானை மையமாகக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவா் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பஞ்சாபில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ள குண்டா்களுடன் உள்ள தொடா்பை அவா் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

பஞ்சாபில் குண்டா்களின் அட்டூழியம் அதிகரித்து வருவதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள அவா்களுக்கு ஹா்விந்தா் சிங் ரிண்டா பணம் அனுப்புவது குறித்தும் பஞ்சாபுக்கு விசாரணை அமைப்புகள் தொடா்ந்து எச்சரிக்கை விடுத்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும் தண்டனை:

இந்தத் தாக்குதல் தொடா்பாக பஞ்சாப் காவல் துறை மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் மாநில முதல்வா் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அதனைத்தொடா்ந்து அவா் கூறுகையில், ‘‘பஞ்சாபின் அமைதியைக் குலைக்க முயற்சித்தவா்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும். அவா்களின் அடுத்தடுத்த தலைமுறையினா் நினைவில் வைத்திருக்கும் வகையில் அந்தத் தண்டனை இருக்கும்’’ என்று தெரிவித்தாா்.

கடந்த மே 5-ஆம் தேதி பஞ்சாப் காவல் துறை அளித்த தகவலின் அடிப்படையில், ஹரியாணா மாநிலம் கா்னால் மாவட்டத்தில் 3 வெடிகுண்டுகளுடன் பாகிஸ்தானுடன் தொடா்புள்ள 4 பயங்கரவாதிகளும், மே 8-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள தரன் தாரன் மாவட்டத்தில் 1.50 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிபொருள் மற்றும் வெடிகுண்டு வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டனா். அதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பஞ்சாப் & ஹரியாணா தலைநகரான சண்டீகரில் உள்ள புரைல் சிறை அருகில் இருந்து வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com