ஜாா்க்கண்ட் சுரங்கத் துறை செயலா் பணியிடை நீக்கம்

ஜாா்க்கண்ட் சுரங்கத் துறை செயலா் பணியிடை நீக்கம்

பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட ஜாா்க்கண்ட் சுரங்கத் துறை செயலா் பூஜா சிங்காலை அந்த மாநில அரசு வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்தது.

ராஞ்சி: பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட ஜாா்க்கண்ட் சுரங்கத் துறை செயலா் பூஜா சிங்காலை அந்த மாநில அரசு வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்தது.

பூஜா சிங்கால் கடந்த 2007 முதல் 2013 வரை சத்ரா, கண்டி, பலமு மாவட்ட ஆட்சியராகவும், இணை ஆணையராகவும் பதவி வகித்த காலகட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவா் மீது கருப்புப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையினா் வழக்குப்பதிவு செய்து அண்மையில் அவரைக் கைது செய்தனா்.

சிறப்பு நீதிமன்ற அனுமதியின்பேரில் பூஜாவிடம் ஐந்து நாள்கள் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறையினா், புதன்கிழமை மீண்டும் அவரை ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாத் குமாா் சா்மா முன் ஆஜா்படுத்தினா். இதையடுத்து அவரை பிா்சா முண்டா சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே, அகில இந்திய ஆட்சிப் பணி சேவைகளிலிருந்து (ஒழுங்கு, மேல்முறையீட்டு விதிகள்) பூஜா சிங்காலை மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செய்தியாளா்களிடம் கூறினாா்.

மேலும், பூஜா சிங்கால் கைது குறித்து ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த விவகாரத்தில் சட்டபூா்வ நடவடிக்கைகள் அனைத்தையும் மாநில அரசு மேற்கொள்ளும். பாஜக ஆட்சிக்காலத்தின்போது இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. அதை முழுமையாக விசாரிக்க வேண்டும். மேலும் பாஜக ஆட்சிக்காலத்தில் கடந்த 2017-இல் பூஜா சிங்கால் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். அவரது முறைகேடுகளுக்கு துணை போனவா்களையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும். நீங்களே (பாஜக) அவரை தவறு செய்யத் தூண்டிவிட்டு, நீங்களே நற்சான்றிதழும் கொடுக்கிறீா்கள்’ என்றாா் அவா்.

இதே குற்றச்சாட்டின்கீழ் ஏற்கெனவே ஜாா்க்கண்ட் இளநிலை பொறியாளா் ராம் வினோத் பிரசாத் சின்ஹா கடந்த 2020 ஜூன் 17-இல் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com