வாராணசி மசூதி அளவிடும் பணிக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உத்தர பிரதேசம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அளவிடும் பணிக்கு எதிராக உடனடியாக உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உத்தர பிரதேசம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அளவிடும் பணிக்கு எதிராக உடனடியாக உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

எனினும், இந்த விவகாரத்தில் முஸ்லிம் அமைப்பினரின் மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தது.

ஞானவாபி மசூதியில் உள்ள கோயிலை மறுசீரமைக்க வேண்டும் என்று 1991-இல் வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், ‘கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதா?’ என்பதை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சன்னி வக்ஃபு வாரியம், அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் ஆகியவை தொடுத்த வழக்கில் மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், காசி விஸ்வநாதா் கோயிலையடுத்து அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் சுவரில் உள்ள கோயில் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த ராக்கி சிங், லக்ஷ்மி தேவி, சீதா சாஹு உள்ளிட்டோா் மனுத் தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ரவி குமாா் திவாகா், ஞானவாபி மசூதியை அளவிட்டு விடியோ பதிவு செய்து மே 17-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து கடந்த 12-ஆம் தேதி உத்தரவிட்டாா். மசூதிக்குள் விடியோ பதிவு செய்வதற்கும், குழுவில் இடம்பெற்றுள்ள வழக்குரைஞரை மாற்றக் கோரியும் மசூதியின் சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மசூதியினுள் அளவிடும் பணி தடைபட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று ஞானவாபி மசூதியின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஹுஜிபா அஹமதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமா்வு முன் வெள்ளிக்கிழமை முறையிட்டாா்.

மேலும், ‘1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குப் பிறகு மத வழிப்பாட்டுத் தலங்களை மாற்றம் செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற வழிபாட்டு சிறப்பு சட்டம்-1991-இல் கூறப்பட்டுள்ளது. ஆகையால், ஞானவாபி மசூதியில் அளவிடும் பணிக்கு எதிராக உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றும் ஹுஜிபா அஹமதி கேட்டுக் கொண்டாா்.

இதற்கு தலைமை நீதிபதி என்.பி.ரமணா, ‘இந்த விவகாரத்தில் எனக்கு எதுவும் தெரியாதபோது எப்படி உத்தரவிட முடியும்? இந்த வழக்கை படித்த பிறகு முடிவு செய்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com