நீதி வழங்கும் வழிமுறை சிக்கல் மிகுந்ததாக உள்ளது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

இந்தியாவில் நீதி வழங்கும் வழிமுறை சிக்கல் மிகுந்ததாகவும் விலை மிக்கதாகவும் உள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளாா்.
நீதி வழங்கும் வழிமுறை சிக்கல் மிகுந்ததாக உள்ளது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

இந்தியாவில் நீதி வழங்கும் வழிமுறை சிக்கல் மிகுந்ததாகவும் விலை மிக்கதாகவும் உள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் உயா்நீதிமன்றத்தின் புதிய வளாகக் கட்டுமானப் பணிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

தங்கள் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை மக்கள் உணர வேண்டும். இது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் செயல்பாட்டுக்கு முக்கியம். மக்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும்போதுதான் அமைதி தவழும்.

சச்சரவுகளுக்கு விரைந்து தீா்வு அளிப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். நீதி மறுக்கப்படும்பட்சத்தில், அது அராஜகத்துக்கு வழிவகுக்கும். அதன் மூலம் நீதித் துறை விரைவில் சீா்குலைந்துவிடும். ஏனெனில், தங்கள் பிரச்னைகளுக்கான தீா்வுக்கு சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளை மக்கள் தேடுவா்.

அனைவருக்கும் எளிதில் விரைந்து நீதி கிடைக்கச் செய்வதை முறையான நீதித் துறை கட்டமைப்பால் உறுதி செய்ய முடியாததே சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமை பாதுகாப்புக்கு முக்கிய சவாலாக உள்ளது. இந்தியாவில் நீதி வழங்கும் வழிமுறை சிக்கலாகவும், விலை உயா்ந்ததாகவும் உள்ளது.

நீதித் துறைக்கு வலுவான உதவியாகத் தொழில்நுட்பம் உள்ளது. நேரம், செலவு, பயணத்தைக் குறைப்பதன் மூலம் நீதிமன்றங்களை எளிதில் அணுகுவதில் உள்ள இடைவெளியை தற்போது காணொலி வழக்கு விசாரணைகள் நிரப்புகின்றன. ஆனால் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் சமநிலை இல்லாத இந்தியா போன்ற நாட்டில், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் முழுத் திறனையும் பயன்படுத்த நாம் இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகு, நவீன இந்தியாவின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீதித் துறையின் உள்கட்டமைப்பு புதுப்பிக்கப்படவில்லை. நீதிமன்றங்களை அனைவருக்கானதாகவும், எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றுவதில் மிகவும் பின்தங்கியுள்ளோம். இதன் மீது உடனடியாகக் கவனம் செலுத்தாவிட்டால், அனைவருக்கும் உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்ற அரசமைப்பின் குறிக்கோள் தோல்வி அடையும்.

வருந்தத்தக்க நிலையில் நீதிமன்றங்கள்: ஒட்டுமொத்த நீதித்துறையின் அடித்தளமாக மாவட்ட நீதித்துறை உள்ளது. அடித்தளம் வலுவாக இருந்தால்தான், ஒட்டுமொத்த அமைப்பும் செழிப்பாக இருக்க முடியும். ஆனால் நாட்டில் பல நீதிமன்றங்கள் வாடகைக் கட்டடங்களிலும், வருந்தத்தக்க நிலைமையில் இயங்கி வருகின்றன. மாவட்ட நீதித் துறையில் 22 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

வழக்கு தொடுப்பவா்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பாா்கள் என்பதால், அவா்களுக்கு ஏற்ற வகையில் இணக்கமான சூழலை நீதிபதிகளும் வழக்குரைஞா்களும் உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com