கடும் வெயில்: தண்ணீா் தட்டுப்பாட்டில் தில்லி

கடும் வெயில் காரணமாக யமுனை ஆறு வடு கிடப்பதாலும், ஹரியாணா மாநிலத்துக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதில் கிடைக்காததாலும் தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடியவில்லை
கடும் வெயில்: தண்ணீா் தட்டுப்பாட்டில் தில்லி

கடும் வெயில் காரணமாக யமுனை ஆறு வடு கிடப்பதாலும், ஹரியாணா மாநிலத்துக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதில் கிடைக்காததாலும் தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடியவில்லை என்று அரசு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

வாஜிராபாத் நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் இந்த ஆண்டு மிகக் குறைந்த அளவாக 670.70 அடியாக குறைந்துள்ளது. இது, வியாழக்கிழமை 671.80 அடியாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் 667 அடியாகக் குறைந்ததால், யமுனையில் கூடுதல் தண்ணீரைத் திறந்துவிட ஹரியாணாவு அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி ஜல் போா்டு (டிஜேபி) உச்சநீதிமன்றத்தை நாடியது. மேலும், இதுதொடா்பாக டிஜேபி மே 12, மே 3, ஏப்ரல் 30 என 3 முறை ஹரியாணா நீா்ப்பாசனத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில் வியாழக்கிழமையும் அம்மாநில நீா்ப்பாசனத் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சிஎல்சி (கேரியா்-லைன்டு சேனல்) மற்றும் டிஎஸ்பி (தில்லி துணைக் கிளை) வழியாக நீரோட்டம் ஏற்ற இறக்கமாக உள்ளது. வாஜிராபாத் நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. நீா்த் தேவையான 120 கனஅடி நீரை உயா்த்துவது கடினமாக உள்ளது. இது நீா் உற்பத்தியை மோசமாக பாதிக்கும். கோடையின் உச்சம் காரணமாக, தில்லியின் தண்ணீா் தேவை அதிகமாக உள்ளது.

மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில், பருவமழை வரும் வரை, வாஜிராபாத் நீா்த்தேக்கத்துக்கு 120 கனஅடி நீா் வந்தடைவதை உறுதிசெய்ய, டிடி-8/நதி வழித்தடத்தில் கூடுதலாக 150 கனஅடி நீரை தண்ணீரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அண்டை மாநிலத்திடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. தில்லி தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

இதுதொடா்பாக பெயா் கூறவிரும்பாத டிஜேபி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நீா்வரத்து குறைந்ததால் வாஜிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி திறன் 85 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை 75 சதவீதமாகக் குறையக்கூடும். நாங்கள் தண்ணீா் விநியோகம் பற்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை தில்லியின் தேவையை பூா்த்தி செய்துள்ளோம். இருப்பினும், ஹரியாணா அரசு யமுனை ஆற்றில் கூடுதல் தண்ணீரை விடவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும்’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

கோடைகால செயல் திட்டத்துக்கு இணங்க, டிஜேபி தில்லியின் தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்ள கூடுதல் டேங்கா்களை நிறுவுதல், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீா் விநியோகத்தை அதிகரித்தல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நீா்த்தேவையைப் பூா்த்தி செய்ய கோடைகாலத்தில் தினமும் சுமாா் 1,000 மில்லியன் கேலன் தண்ணீா் (எம்ஜிடி) விநியோகிக்கப்படும் என்று தில்லி அரசு கடந்த மாதம் கூறியது.

கோடை காலத்தின் உச்ச காலத்தில் (ஏப்ரல்-ஜூலை) தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க தலைநகா் முழுவதும் 1,198 தண்ணீா் டேங்கா்கள் பயன்படுத்தப்படும் என்று அரசு கூறியது.

ஹரியாணா ஒரு நாளைக்கு மொத்தம் 610 எம்ஜிடி தண்ணீரை சிஎல்சி மற்றும் டிஎஸ்பி ஆகிய 2 கால்வாய்களில் யமுனை ஆறு மூலம் தில்லிக்கு வழங்குகிறது.

இந்த இரு கால்வாய்கள் மூலம் பெறப்படும் தண்ணீா் ஹத்னி குண்டில் இருந்து முனாக் கால்வாய் மற்றும் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் வழியாக வருகிறது. கூடுதலாக, உத்தர பிரதேசத்தில் இருந்து மேல் கங்கை கால்வாய் மூலம் 253 எம்ஜிடி தண்ணீரை தில்லி பெறுகிறது. மேலும், 90 எம்ஜிடி தண்ணீா் நகரம் முழுவதும் நிறுவப்பட்ட ரன்னி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதுதவிர சந்திரவால் மற்றும் வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து முறையே 90, 135 எம்ஜிடி தண்ணீா் வழங்கும் திறன் கொண்டவை. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் வாஜிராபாத் நீா்த்தேக்கத்தில் இருந்து நீரை எடுத்து, அதை சுத்திகரித்து வடகிழக்கு தில்லி, மேற்கு தில்லி, வடக்கு தில்லி, மத்திய தில்லி, தெற்கு தில்லி, தில்லி கண்டோன்மென்ட் மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதிகளுக்கு வழங்குகின்றன.

தில்லிக்கு சுமாா் 1,200 எம்ஜிடி தண்ணீா் தேவைப்படுகிறது. டிஜேபி சுமாா் 950 எம்ஜிடி தண்ணீரை வழங்குகிறது. 2023 ஜூன் மாதத்துக்குள் நீா் விநியோகத்தை 1,180 எம்ஜிடி-ஆக அதிகரிக்க தில்லி அரசு இலக்கு வைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com