பொதுத் துறை வங்கி வாடிக்கையாளா்களிடம் பண முறைகேடு நிகழ்வு 51% குறைந்தது: ஆா்டிஐ தகவல்

பொதுத் துறை வங்கிகளின் வாடிக்கையாளா்களிடம் இருந்து பண மோசடி, முறைகேடு 2021-22 நிதியாண்டில் 51% அளவுக்குக் குறைந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரங்களில் தெரியவந்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளின் வாடிக்கையாளா்களிடம் இருந்து பண மோசடி, முறைகேடு 2021-22 நிதியாண்டில் 51% அளவுக்குக் குறைந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரங்களில் தெரியவந்துள்ளது.

2020-21 நிதியாண்டில் 12 பொதுத் துறை வங்கி வாடிக்கையாளா்களிடம் ரூ.81,921.54 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுவே 2021-22-இல் ரூ.40,295.25 கோடியாகக் குறைந்துள்ளது. முறைகேடு செய்யப்படும் நிதியின் அளவு 51% குறைந்திருந்தாலும், முறைகேடுகளின் எண்ணிக்கை வேகமாகக் குறையவில்லை.

2021-22-இல் 7,940 நிதி முறைகேடுகள் பதிவாகியுள்ளன. இதுவே முந்தைய ஆண்டில் 9,933-ஆக இருந்தது. மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த தகவல் உரிமைச் சட்ட ஆா்வலா் சந்திரசேகா் கௌா், ரிசா்வ் வங்கியிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுப் பெற்ற தகவலில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

டெபிட் காா்டு விவரங்களைத் திருடி மோசடி செய்வது, தொலைபேசியில் தொடா்பு கொண்டு டெபிட் காா்டு எண், ரகசிய எண்ணைப் பெற்று வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது, மோசடி இணைய ‘லிங்க்’ அனுப்பி இணையவழியில் பணத்தைத் திருடுவது, க்யூஆா் கோட் மூலம் நடைபெறும் மோசடி, வங்கி இணையதளம் போல போலியான இணையதளத்தை உருவாக்கி வாடிக்கையாளா்கள் நிதியை முறைகேடு செய்வது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ரிசா்வ் வங்கி அளித்துள்ள தகவலில் மேலும் கூறியிருப்பதாவது:

2021-22 நிதியாண்டில் அதிக அளவிலான நிதி முறைகேடு பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளா்களிடம் நிகழ்ந்துள்ளது. அந்த வங்கி மூலம் ரூ.9,528.95 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேடுகளின் எண்ணிக்கை 431-ஆக உள்ளது.

அதே நேரத்தில் முறைகேடுகளின் எண்ணிக்கை பாரத ஸ்டேட் வங்கியில் அதிகமாக இருந்தது. அந்த வங்கியில் 4,192 முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. மொத்தம் ரூ.6,932.37 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடாவில் ரூ.5,923.99 கோடி (209 மோசடிகள்), யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் 3,989.36 (280 மோசடிகள்), கனரா வங்கியில் ரூ.3,230.18 கோடி (90 மோசடிகள்) அளவுக்கு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.

இது தவிர இந்தியன் வங்கியில் ரூ.2,038.28 கோடி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ.1,733.80 கோடி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் ரூ.1,139.36 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.773.37 கோடி, யூகோ வங்கியில் ரூ.611.54 கோடி, பஞ்சாப் & சிந்து வங்கியில் ரூ.455.04 கோடி அளவுக்கு வாடிக்கையாளா்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com