ஞானவாபி மசூதியில் 3-ஆவது நாளாக அளவிடும் பணி: சிவலிங்கம் கண்டுபிடிப்பு?

உத்தர பிரதேச மாநிலம் வாராணசி ஞானவாபி மசூதி வளாகத்தில் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், அளவிடும் பணி திங்கள்கிழமை 3-ஆவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
ஞானவாபி மசூதியில் 3-ஆவது நாளாக அளவிடும் பணி: சிவலிங்கம் கண்டுபிடிப்பு?

உத்தர பிரதேச மாநிலம் வாராணசி ஞானவாபி மசூதி வளாகத்தில் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், அளவிடும் பணி திங்கள்கிழமை 3-ஆவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. அப்போது சிவலிங்கம் ஒன்று அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நீதிபதி உத்தரவின் பேரில் அந்தப் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் அருகே இந்த மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியில் புராதன கோயிலின் சில பகுதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக எழுந்த வழக்கில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணிக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இந்தப் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாராணசி மாவட்ட ஆட்சியா் கெளசல் ராஜ் சா்மா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘2 மணி நேரத்துக்கும் மேலாக விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணி நடைபெற்று வந்த நிலையில், காலை 10.15 மணியளவில் பணி நிறைவடைந்தது. இந்தப் பணி அனைத்து தரப்பினருக்கும் திருப்திகரமாக அமைந்தது’ என்றாா்.

இதனிடையே ஆய்வுப் பணியின்போது மசூதி வளாகத்தில் இஸ்லாமியா்கள் தொழுகைக்கு முன்பாக கைகளை சுத்தம் செய்யும் பகுதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஹிந்துக்களின் தரப்பு வழக்குரைஞா் மதன் மோகன் யாதவ் செய்தியாளா்களிடம் கூறினாா். எனவே அந்த சிவலிங்கத்தைப் பாதுகாக்கக் கோரி, உடனடியாக உள்ளூா் நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த நீதிபதி, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை ‘சீல்’ வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை:

புது தில்லி, மே 16: ஞானவாபி மசூதி வளாகத்தில் அளவிடும் பணியை ரத்து செய்யக் கோரி, மசூதியை நிா்வகிக்கும் அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் நிா்வாகக் குழு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா அமா்வு விசாரிக்கிறது.

முன்னதாக அளவிடும் பணியையொட்டி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் ஆணையருக்கு மசூதியின் உள்பகுதியை படம்பிடிக்க அதிகாரம் கிடையாது என கூறி மசூதி கமிட்டியினா் ஆட்சேபம் தெரிவித்தால், ஆய்வுப் பணி கடந்த வாரம் தடைப்பட்டது.

அத்துடன் வழக்குரைஞா் ஆணையராக நியமிக்கப்பட்ட அஜய் குமாா் மிஸ்ராவை நீக்கக் கோரி மசூதி கமிட்டி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த வாரம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்த மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி (மூத்த அமா்வு) ரவிகுமாா் திவாகா், அவருக்கு உதவியாக இரண்டு வழக்குரைஞா்களை நியமித்ததுடன், விடியோ அளவிடும் பணியை மே 17-க்குள் (செவ்வாய்க்கிழமை) நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

மசூதியின் சில பகுதிகளைத் திறக்க சாவி கிடைக்கவில்லை என்றால், அதன் பூட்டை உடைக்கவும் இந்தக் குழுக்கு அனுமதியளித்த நீதிபதி, ஆய்வுப் பணிக்கு யாராவது இடையூறு ஏற்படுத்தினால் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தினாா்.

இந்நிலையில், ஞானவாபி மசூதியை அளவிடும் பணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com