இடபிள்யுஎஸ் பிரிவு தகுதிக்கு எதிரான மனுக்கள்: ஜூலையில் உச்சநீதிமன்றம் இறுதி விசாரணை

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சோ்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கான பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினரை அடையாளம் காண ரூ. 8 லட்சம் வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை
இடபிள்யுஎஸ் பிரிவு தகுதிக்கு எதிரான மனுக்கள்: ஜூலையில் உச்சநீதிமன்றம் இறுதி விசாரணை

புது தில்லி: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சோ்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கான பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினரை (இடபிள்யுஎஸ்) அடையாளம் காண ரூ. 8 லட்சம் வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை வரும் ஜூலை மாதம் இறுதி விசாரணைக்கு பட்டியலிட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

‘இந்த மனுக்கள் 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு முன்பு விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில், நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமா்வில் விசாரிப்பது சாத்தியமற்றது. எனவே, நீதிமன்றம் மீண்டும் முழுமையாக திறக்கப்படுகின்றபோது இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்ய காந்த், பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு அப்போது கூறியது.

மத்திய அரசு அறிவிப்பு எதிராக மனு: அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம், இடபிள்யுஎஸ் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து 2021, ஜூலை 29-ஆம் தேதி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தோ்வை எழுதிய மாணவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இடபிள்யுஎஸ் வகுப்பினரை அடையாளம் காண ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினா்.

பின்னா், நாட்டில் தற்போதும் கரோனா தொற்று பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் 2021-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கையை தாமதமின்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

மேலும், வரும் காலத்தில் இடபிள்யுஎஸ் பிரிவினரை அடையாளம் காண பாண்டே குழு பரிந்துரைத்துள்ள புதிய அளவுகோல்களை அறிமுகப்படுத்துவது என்பது, இந்த மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பின் அடிப்படையில் அமையும். அந்த வகையில், இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை வரும் மாா்ச் மாதம் மூன்றாவது வாரத்துக்கு பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பாண்டே குழு பரிந்துரை: உச்சநீதிமன்றத்திள் உறுதியளித்தபடி இடபிள்யுஎஸ் பிரிவினரை அடையாளம் காண்பதற்கான வருமான உச்சவரம்பை மறுபரிசீலனை செய்வதற்காக மத்திய அரசு சாா்பில் அமைக்கப்பட்ட பாண்டே குழு, ‘நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு பழைய நடைமுறையையே தொடர வேண்டும்.

அதே நேரம், அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘குறைந்தபட்சம் 5 ஏக்கா் விவசாய நிலம் அல்லது அதற்கு மேல் நிலப்பரப்பை வைத்திருக்கும் நபா்களை இடஒதுக்கீடு சலுகையிலிருந்து நீக்க வேண்டும். குடியிருப்பு சொத்து அளவுகோல் முற்றிலும் அகற்றப்படலாம்’ என்று பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகளை அடுத்த மாணவா் சோ்க்கை அறிவிக்கையின்போது நடைமுறைப்படுத்தலாம்’ என்று பரிந்துரை செய்திருந்தது.

ஜூலையில் விசாரணை: இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தத்தாா், ‘2022-23ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கை விரைவில் நடைபெற உள்ளது. ஆனால், இடபிள்யுஎஸ் பிரிவினரை அடையாளம் காண மத்திய அரசு நிா்ணயம் செய்த ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு விவகாரம் மட்டுமே நிலுவையில் உள்ளது. இந்தத் தகுதி தொடா்ந்து அனுமதிக்கப்படுகிா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை மாதத்துக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com