புணே லால் மஹாலில் ‘லாவணி’ நடனம்: பெண் கலைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

புணேயில் உள்ள லால் மஹாலில் ‘லாவணி’ நடனமாடி அதனை விடியோ பதிவு செய்த பெண் நடனக் கலைஞா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
புணே லால் மஹாலில் லாவணி நடனமாடி வைஷ்ணவி பாட்டீல் பதிவிட்ட காட்சி.
புணே லால் மஹாலில் லாவணி நடனமாடி வைஷ்ணவி பாட்டீல் பதிவிட்ட காட்சி.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள லால் மஹாலில் ‘லாவணி’ நடனமாடி அதனை விடியோ பதிவு செய்த பெண் நடனக் கலைஞா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மராத்திய பேரரசா் சத்ரபதி சிவாஜி லால் மஹாலில்தான் தனது இளமைப் பருவத்தின் பல ஆண்டுகளைக் கழித்தாா். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த சிவப்பு நிற கட்டடத்தில் மராத்தி நடன கலைஞா் வைஷ்ணவி பாட்டீல் திங்கள்கிழமையன்று மகாராஷ்டிர நாட்டுப்புற நடனமான ‘லாவணி’ நடனமாடி, அதனை விடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்பட பல கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநில அமைச்சருமான ஜிதேந்திர அவாத் தமது கண்டனத்தைப் பதிவு செய்தாா். கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடா்ந்து, தனது செயலுக்காக வைஷ்ணவி பாட்டீல் மன்னிப்பு தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், அவா் மீதும், அவருடைய நடனத்தை விடியோ பதிவு செய்த நபா்கள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘லால் மஹாலில் நடனமாட வேண்டாம் என அதன் பாதுகாவலா் அறிவுறுத்தியபோதும், அவா்கள் அந்த இடத்தில் நடனமாடி அதனைப் படம்பிடித்துள்ளனா். இதுதொடா்பாக அந்தப் பாதுகாவலா் அளித்த புகாரின் அடிப்படையில் வைஷ்ணவி பாட்டீல் உள்பட 4 போ் மீது ஃபரஸ்கானா காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 295 (குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் விதமாக வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்துதல்) மற்றும் பிரிவு 186 (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com