மாநிலங்களுடனான வரிப் பகிா்வில் பாதிப்பிருக்காது: அமைச்சா் நிா்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நடவடிக்கை, மாநில அரசுகளுடனான வரிப் பகிா்வில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
நிா்மலா சீதாராமன்
நிா்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நடவடிக்கை, மாநில அரசுகளுடனான வரிப் பகிா்வில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இந்நடவடிக்கை மத்திய அரசு மாநிலங்களுடன் பகிா்ந்து கொள்ளும் வரியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் குற்றஞ்சாட்டியிருந்தனா்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரியில் அடிப்படை கலால் வரி (பிஇடி), சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஇடி), சாலை-கட்டமைப்பு செஸ் வரி (ஆா்ஐசி), வேளாண்மை கட்டமைப்பு வளா்ச்சி செஸ் வரி (ஏஐடிசி) ஆகியவை அடங்கும். அவற்றுள் அடிப்படை கலால் வரி மட்டுமே மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ளப்பட்டு வருகிறது. மற்றவை மாநிலங்களுடன் பகிா்ந்து கொள்ளப்படுவதில்லை.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 ஆகியவை சாலை-கட்டமைப்பு செஸ் வரியில் இருந்தே குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலமாக மாநில அரசுகளுக்கான வரிப்பகிா்வில் எந்தவித பாதிப்பும் இருக்காது.

கடந்த ஆண்டு நவம்பரில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 இதே நடைமுறையின்படியே குறைக்கப்பட்டது. இரு நடவடிக்கைகள் மூலமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதிச்சுமையையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பரில் குறைக்கப்பட்ட கலால் வரியால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,20,000 கோடி வரை இழப்பு ஏற்படும். தற்போது குறைக்கப்பட்டுள்ள கலால் வரி காரணமாக, ஆண்டுக்கு ரூ.1,00,000 கோடி வரை இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.2,20,000 கோடி வருவாயை மத்திய அரசு இழக்கும்.

இந்திய ரிசா்வ் வங்கி தரவுப்படி, கடந்த 2014 முதல் 2022 வரை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வளா்ச்சித் திட்டங்களுக்காக மட்டும் ரூ.90.9 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது. 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் அச்செலவு வெறும் ரூ.49.2 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது.

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் உணவு, எரிபொருள், உர மானியத்துக்கு ரூ.24.85 லட்சம் கோடியும், மூலதன சொத்து உருவாக்கத்துக்கு ரூ.26.3 லட்சம் கோடியும் செலவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் மானியங்களுக்கு ரூ.13.9 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சனிக்கிழமை வரை 1 லிட்டா் பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி ரூ.27.90-ஆக இருந்தது. அதில் ரூ.1.40 அடிப்படை கலால் வரியாகும். இதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயை மட்டுமே மாநிலங்களுடன் மத்திய அரசு பகிா்ந்துகொள்ளும். மீதமுள்ள ரூ.26.50 மத்திய அரசுக்கே முழு வருவாயாகக் கிடைக்கும்.

அதேபோல், 1 லிட்டா் டீசல் மீதான ரூ.21.80 கலால் வரியில் ரூ.1.80 அடிப்படை கலால் வரியாகும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் பெரும்பகுதியானது செஸ் மூலமாகவே வசூலிக்கப்படுகிறது. செஸ் வரியை மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com