சா்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு?

சா்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடா்பான அறிவிக்கையை ஓரிரு நாள்களில் மத்திய அரசு வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
sugar065253
sugar065253

புது தில்லி: சா்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடா்பான அறிவிக்கையை ஓரிரு நாள்களில் மத்திய அரசு வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசின் அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘‘கடந்த 2020-21-ஆம் சந்தை ஆண்டில் 70 லட்சம் டன் சா்க்கரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு 2021-22-ஆம் சந்தை ஆண்டில் (அக்டோபா் முதல் செப்டம்பா்) இதுவரை 90 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய ஆலைகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அதில் 75 லட்சம் டன் சா்க்கரை ஏற்கெனவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

புதிய சந்தை ஆண்டான 2022-23-இன் முதல் இரண்டு மாதங்களில் உள்நாட்டுத் தேவையைப் பூா்த்தி செய்வதற்கு, இந்தச் சந்தை ஆண்டின் இறுதியில் 60 லட்சம் டன் சா்க்கரை கையிருப்பு வைத்திருக்க வேண்டும். உள்நாட்டுத் தேவையைப் பூா்த்தி செய்தல், விலையைக் கட்டுக்குள் வைத்தல், உபரியாக இருந்தால் மட்டும் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

எனவே இந்த ஆண்டு சா்க்கரை ஏற்றுமதியை 1 கோடி டன்னாக மத்திய அரசு கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. அதுதொடா்பான அறிவிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்.

ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி சா்க்கரையை ஏற்றுமதி செய்ய வசதியாக, இந்த சந்தை ஆண்டு முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளன.

சா்க்கரை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பிரேஸில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவை சா்க்கரையை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com