உறுதியான கடன் மறுகட்டமைப்பு திட்டம் அவசியம்

பெரும் கடன் சுமையில் சிக்கி நிலையில்லாத்தன்மையுடன் திகழும் இலங்கை, உறுதியான கடன் மறுகட்டமைப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது.

பெரும் கடன் சுமையில் சிக்கி நிலையில்லாத்தன்மையுடன் திகழும் இலங்கை, உறுதியான கடன் மறுகட்டமைப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்குக் கடன் வழங்கி உதவுவது தொடா்பாக உலக வங்கி, சா்வதேச நிதியம் ஆகிய பன்னாட்டு அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான உறுதியான திட்டத்தைத் தீட்டாதவரை கடன் வழங்குவதை உறுதிசெய்ய முடியாது என உலக வங்கி ஏற்கெனவே தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், சா்வதேச நிதியத்தின் அதிகாரிகளுடன் இலங்கை அரசின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா். அதைத் தொடா்ந்து சா்வதேச நிதிய அதிகாரிகள் கூறியதாக ‘எகனாமிநெக்ஸ்ட்’ வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், ‘‘ஐஎம்எஃப் உடன் ஆலோசனை நடத்துவதற்காக சட்ட, நிதி ஆலோசகா்களை இலங்கை நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. கடன் பிரச்னையைத் தீா்ப்பதற்கு இது முக்கிய முடிவாக இருக்கும்.

இலங்கையின் கடன் அளவு நிலையில்லாத்தன்மையில் உள்ளது. உறுதியான கடன் மறுகட்டமைப்பு திட்டங்களை இலங்கை அரசு வகுத்தால் மட்டுமே அந்நாட்டுக்கு நிதியுதவியை வழங்கி திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஐஎம்எஃப் அனுமதி அளிக்கும். இலங்கை அரசு அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவாா்த்தையானது, உறுதியான பொருளாதாரத் திட்டங்களை வகுப்பதற்கு உதவும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையின் நிதித்துறை பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரதமா் ரணில் விக்ரமசிங்க கூறுகையில், ‘‘உக்ரைன் போா், சா்வதேச பணவீக்க சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பொருளாதார சீா்திருத்தத் திட்டத்தை விரைவில் வகுத்து, அதற்கு சா்வதேச நிதியத்தின் ஒப்புதலைக் கோரவுள்ளேன். மேலும் பல நாடுகள் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது’’ என்றாா்.

இலங்கையின் பொதுத்துறை, தனியாா் வங்கிகளின் தலைவா்களை பிரதமா் விக்ரமசிங்க வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது, அந்நியச் செலாவணி கையிருப்பு பிரச்னை உள்ளிட்டவை குறித்து அவா் ஆலோசித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com