2035-க்குள் நிலக்கரி பயன்பாட்டை ஒழிக்க ஜி7 நாடுகள் உறுதி

எரிசக்தித் துறையில் நிலக்கரி பயன்பாட்டை 2035-க்குள் முடிவுக்குக் கொண்டுவர ஜி7 நாடுகள் உறுதி ஏற்றுள்ளன.

எரிசக்தித் துறையில் நிலக்கரி பயன்பாட்டை 2035-க்குள் முடிவுக்குக் கொண்டுவர ஜி7 நாடுகள் உறுதி ஏற்றுள்ளன.

பொருளாதாரத்தில் வளா்ச்சியடைந்த அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் ஜி7 கூட்டமைப்பில் உள்ளன. அக்கூட்டமைப்பின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு ஜொ்மனியின் எல்மா நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜி7 நாடுகளின் அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டம் ஜொ்மனி தலைநகா் பொ்லின் நகரில் நடைபெற்றது. அதில், 2035-ஆம் ஆண்டுக்குள் எரிசக்தித் துறையில் நிலக்கரியின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதி ஏற்கப்பட்டது.

கரியமிலவாயு வெளியேற்றமில்லாத சாலைப் போக்குவரத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்தவும் கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டது. இதன் மூலமாக நடப்பு தசாப்தத்தின் இறுதிவாக்கில் பசுமை எரிசக்தியில் இயங்கும் வாகனங்களே பெரும்பாலும் விற்பனையில் இருக்கும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுப்பதற்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் வளா்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளா்ந்து வரும் நாடுகளுக்கும் இடையே போதிய ஒத்துழைப்பு நிலவாத சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், வளா்ந்து வரும் நாடுகளில் பசுமை எரிசக்தித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதியுதவியை வழங்குவதற்கும் ஜி7 நாடுகள் முன்வந்துள்ளன.

ஜி7 அமைச்சா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன. அந்த மாநாட்டில் அவை குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஜி7 அமைச்சா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சா்வதேச சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வரவேற்றுள்ளனா். இந்த முடிவால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என அவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com